22.11.13

20 நாட்கள் கழித்து டி.வி.டியில் படம் பாருங்கள் - மிஷ்கின்

கே.ஆர்.கே மூவிஸ் மற்றும் விஸ்டம் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா புதன்கிழமை நடந்தது.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார், இயக்குநர் சங்கத்தலைவர் விக்ரமன், இயக்குநர்கள் கே.பாக்கியராஜ், சேரன், மிஷ்கின், சமுத்திரகனி, கரு.பழனியப்பன், படத்தின் இயக்குநரும் நாயகனுமான ராமகிருஷ்ணன், நாயகிகள் ஆத்மியா, காருண்யா மற்றும் இசையமைப்பாளர் கண்ணன் உள்ளிட்ட திரைத் துறையினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “வெளிவருகிற ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் கொஞ்சம் இடைவெளி இருந்தால் நல்லது. ஒரு குழந்தை 10 மாதம் சுமக்கப்பட்டு பிறந்தாதான் நல்லது. ஒன்றரை நாட்களிலேயே பிறந்தால் எப்படி? இங்கே விக்ரம், சேரன் எல்லாம் இருக்கிறார்கள். அவர்களின் படங்களை எல்லாம் பார்த்துவிட்டுத்தான் நாங்கள் படம் பண்ணிக்கொண்டிருக்கிறோம். அவர்களின் படங்களும் வெளிவர தாமதமாகிக் கொண்டிருக்கிறது.
‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை எடுத்துவிட்டு ரொம்பவே வலியை சுமந்தேன். இது தொடர வேண்டாம். ஏதாவது ஒரு வழி செய்யுங்கள். ஒரு படம் வெளிவருவதற்கும் இன்னொரு படம் வெளிவருவதற்கும் இடைவெளி விடுங்கள். முன்பெல்லாம். 365 நாட்கள் படம் ஓடும். 10 முறை, 15 முறை எல்லாம் பார்த்து ரசிகர்கள் கொண்டாடுவாங்க. சினிமாவை கனவு தொழிற்சாலை என்று சொல்கிறோம். திருட்டு டி.விடி. பார்ப்பவர்கள் தயவுசெய்து 20 நாட்கள் கழித்து பாருங்கள். திருட்டி டி.வி.டியில் படம் பார்ப்பது இயக்குநர்கள் கழுத்தை கத்தியை வைத்து அறுப்பதுக்கு சமம். சினிமா ஒரு கலை. திருட்டு விசிடி வேண்டாம். நல்ல படங்கள் ஒரு கலைஞனாலும், நல்ல ரசனை கொண்ட பார்வையாளனாலும் வெற்றி பெறுகிறது. இதுபோன்ற சூழலில் புது இயக்குநரின் மீது நம்பிக்கை வைத்து இந்தப்படத்தை தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர் கண்ணனுக்காகவே 365 நாட்கள் ஓடணும்!’’ என்றார்.
இயக்குநர் சங்கத்தலைவர் விக்ரமன் பேசுகையில், “சமீப காலமாக நல்ல நல்ல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்தப்படங்கள் எல்லாம் வியாபார ரீதியாக வெற்றி பெறுகிறதா என்றால் இல்லை. ‘மூடர்கூடம்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ போன்ற படங்கள் எல்லாம் உழைப்பைக் கொட்டி எடுக்கப்பட்ட படங்கள். ஆனால், சரியாக வியாபாரம் ஆகவில்லை. தியேட்டர்களில் படம் ரிலீஸாகி பேசப்பட்ட பிறகுதான் படங்கள் வெற்றிப்படங்களாக மாறும். இப்போது உடனுக்குடன் படங்கள் தியேட்டர்களை விட்டு எடுத்து விடும் சூழல் இருந்து வருகிறது. ஒரு படத்திற்கும் அடுத்து வரும் படத்திற்கும் இடைவெளி இருந்தால் நன்றாக இருக்கும். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயாரிடம் இது பற்றி பேசியிருக்கிறோம். எல்லோரும் கூடிப்பேசி இதுக்கு ஒரு சரியான வழியை ஏற்படுத்த வேண்டும்.
தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார் பேசுகையில், “இப்போதெல்லாம் படத்தை எடுப்பது எளிதாக இருக்கிறது. அந்தப்படத்தை வெளியிட்டு பிசினஸ் பார்ப்பதுதான் கஷ்டமான விஷயமாகியுள்ளது. இதுபோன்ற சூழலில் ராமகிருஷ்ணனை நம்பி தயாரிப்பாளர் முன் வந்து படத்தை கொடுத்திருப்பது சந்தோஷமான விஷயம். பொதுவாக நிகழ்ச்சிகளில் தயாரிப்பாளர்கள் பற்றி பேசுவது குறைவாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் எல்லோருமே அவரை பாராட்டினார்கள். இது நல்ல விஷயமாக படுகிறது. மிஷ்கின் பேசும்போது கஷ்டம் என்று சொன்னார். புது இயக்குநர்கள் ஒரு படம் ஹிட் ஆனதும், தயாரிப்பு தொடங்கி மேற்கொண்ட வேலைகளிலும் கவனத்தை செலுத்த தொடங்கிவிடுகின்றனர். அதனால் அவர்களால் படத்தை இயக்கும் ‘கிரியேட்டிவிட்டி’ விஷயத்தில் சிறப்பாக பணியாற்றுவது குறைந்துவிடுகிறது. அதையும் இயக்குநர்கள் கடைபிடிக்க வேண்டும். விக்ரமன் ஆதங்கத்தை பதிவு செய்தார். அவருடைய ஆதங்கம் சரி. அதில் சில சில பிரச்னைகள் இருக்கிறது. எல்லோரும் கூடிப்பேசி நல்லது செய்வோம். சினிமாவுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் பணிபுரிகிறோம். செய்வோம்!’’ என்றார்.

No comments:

Post a Comment