நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையைப் பற்றி. ஆனால் அந்த ஆலமரத்தின் ஆனி வேர் யார் என்று சிலருக்கு தெரிந்திருக்காது.
இந்தியத் திருநாட்டில் முதல் சட்டசபை பெண் உறுப்பினர், முதல் பெண் மருத்துவர் என்கிற பல சாதனைகளுடன் வரலாற்றுப் பக்களில் இடம்பிடித்த இவரின் வாழ்வியல், ஒவ்வொரு பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு. அதற்காகவே இங்கு நான் அதனை வெளியிடுகிறேன்.
ஒரு நாள் தமிழக சட்டசபையில் அனல் பறக்கும் விவாதம் நடந்தது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக, கோயில்களில் பொட்டுக்கட்டுதல் என்கிற ‘தேவதாசி’முறை வழக்கத்திலிருந்தது. அது ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அனல் பறக்கும் விவாதத்திற்குக் காரணமாக இருந்தது.
பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து.. தனது நெஞ்சுரத்தால் பெண் விடுதலைக்காகவும் தேவதாசி ஒழிப்புக்காகவும் தன்னை போராடிய அந்த வீரப்பெண், ” ‘தேவதாசி’முறை தமிழகத்திலிருந்து ஒழிக்கப்பட்டே தீரவேண்டும்.. வரும் காலத்தில் ‘தேவதாசி’ என்கிற பெயர் சரித்திரத்தில்கூட இடம்பெறக் கூடாது” என்று ஆவேசமாக முழக்கமிட்டார்.
அந்தப்பெண்ணின் வீரமுழக்கத்தை மறுக்கும் விதமாக.. சத்தியமூர்த்தி அவர்கள், “தேவதாசிகள் என்பவர்கள் ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள், அவர்கள் தேவர்களின் அதாவது தெய்வங்களின் அடிமை என்கிற புனிதத்தன்மை பெற்றவர்கள். அதை ஏன் ஒழிக்க வேண்டுமென்கிறீர்கள்?” என்று கேட்டார்.
சற்றும் தாமதிக்காமல்.. அந்தப் பெண், “தேவதாசி முறை புனிதமானது என்றால், தேவதாசி முறை ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்றால், அந்தத் தொழிலை பிற்படுத்தப்பட்ட எங்கள் குலத்துப் பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமா? உங்கள் உயர்ஜாதிக் குடும்பத்திலிருந்து எந்தப் பெண்ணையாவது தேவதாசி ஆக்குங்களேன்!” என்று அனல்தெறித்தார். சட்டசபையே ஒரு நொடி ஆடிப்போனது.
அந்தக் கனல் பொழிந்த குரலுக்குச் சொந்தக்காரர்தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி!
இந்தியத் திருநாட்டில் முதல் சட்டசபை பெண் உறுப்பினர் என்கிற வரலாற்றுப் பெருமைக்குச் சொந்தக்காரரான இவரின் வாழ்வியல், ஒவ்வொரு பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு. 1886 ஆம் வருடம் புதுக்கோட்டையில் நாராயணசாமிக்கும், சந்திரம்மாளுக்கும் மூத்தமகளாகப் பிறந்தார் முத்துலட்சுமி. முத்துலட்சுமியின் குடும்பம் அன்று புதுக்கோட்டை சமஸ்தானத்தில் பெரும் மதிப்புக்குரிய குடும்பமாகத் திகழ்ந்தது. அவரது தந்தை நாராயணசாமி, மகாராஜா கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியபோதும் கரைபடியாத கரம் என்பதால்… வீட்டுக்குள் நான்கு பிள்ளைகளையும் படிக்க வைக்க முடியாத பணப்பற்றாக்குறை ஏற்பட்டது.
மூத்த பெண்ணான முத்துலட்சுமியை பள்ளிப் படிப்போடு நிறுத்தி விடலாமா? என்று நாராயணசாமி நினைத்தபோது… முத்துலட்சுமியின் கல்வியறிவை முடக்கி அவரை கிணற்றுத் தவளையாக்கிவிட வேண்டாம் என, அவர் படித்த பள்ளி ஆசிரியர்கள் நாராயண சாமியிடம் கெஞ்சினார்கள்.
முத்துலட்சுமி, அவர்களின் கெஞ்சுதலுக்கு நன்றி உபகாரமாக, பள்ளிக்கூடத்திலேயே அவர் ஒருவர் மட்டும் மெட்ரிக்குலேஷன் தேர்வில் வெற்றி பெற்று பள்ளியின், ஆசிரியர்களின் மானத்தைக் காப்பாற்றினார்.
அதற்கடுத்து புதுக்கோட்டை அரசர் கல்லூரியில் சேர்ந்தபோது, அவருக்கு கல்லூரி நிர்வாகம் ரத்தினக் கம்பள வரவேற்புத் தந்தது. அங்கே அவரது ஆங்கிலப் புலமை… ஆசிரியர்களை அசரவைத்தது.
அத்தனை திறமையும், புத்திக்கூர்மையும் கொண்ட முத்துலட்சுமிக்கு கண்பார்வைக் கோளாறு என்கிற குறையிருந்தது. இருப்பினும், படிப்பையே தனது பார்வையாக மாற்றிக்கொண்டார். அடுத்து, அவருக்குள்ளிருந்த உடல்நலக் குறைபாடு அவரை மருத்துவத் துறையில் கால் பதிக்கத் தூண்டியது.
மருத்துவக் கல்லூரி மாணவியாக அவர் கால் பதித்தபோது, அந்தக் கல்லூரி அவரை இருகரம்நீட்டி வரவேற்றது.
மருத்துவக் கல்லூரியில் சிறந்த மாணவியாக முத்துலட்சுமி திகழ்ந்தார். 1912_ல் மருத்துவராய் வெளியே வந்தார்.
அடுத்து, சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றியபோதுதான் அவருக்கு அரசியல் மீது ஆர்வம் பிறந்தது.
பெண்ணடிமைத்தனம் விலக வேண்டும், தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடுமைகள், அநீதிகள் அழிக்கப்பட வேண்டும். அதற்கு நாம் அரசியலில் இறங்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்குள் உதயமானது.
முத்துலட்சுமியின் அயராத உழைப்பு…. அவரை மருத்துவத்துறையில் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.
அறுவை சிகிச்சைத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று ‘முதல் இந்திய மருத்துவப் பெண்மணி’ என்கிற வரலாற்றுச் சான்றிதழோடு வெளியே வந்தார்.
அடுத்து அவருடைய இலக்கு.. ஏழை எளிய மக்களுக்காக அதுவும் தனது பகுதி மக்களுக்கான சேவையில் தொடங்கியது. புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள கிராமங்கள் எல்லாம் அவர் கரம்பட்டு நலமானது….. அவர் சிகிச்சையால் புத்துயிர் பெற்றன.
அவரது வளர்ச்சியில்… சேவை மனப்பான்மையில்… புளங்காகிதம் அடைந்த அவரது பெற்றோர், அவருக்குத் திருமணம் செய்விக்க விரும்பினர். ஆனால், திருமணம், பெண்களை அடிமையாக்கும்_ஆணாதிக்கம் செலுத்தும் ஒரு சடங்கு என்று நினைத்ததால் அவர் மறுத்தார்.
இருப்பினும், அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சர் சுப்பராயுலு ரெட்டியாரின் மகன் டாக்டர் சுந்தர்ரெட்டியார்… முத்துலட்சுமியின் தந்தையை அணுகி… “முத்துலட்சுமியின் மனம் அறிந்தவன் நான். அவரைத் திருமணம் செய்ய விரும்புகிறேன்..” என்று பெண் கேட்டார்.
அவர் தனது விடுதலை உணர்வுக்கு எந்த விதத்திலும் தடையாகவோ இடைஞ்சலாகவோ இருக்கமாட்டார் என்று உணர்ந்த பின்பு முத்துலட்சுமி திருமணத்திற்குச் சம்மதித்தார். டாக்டர் முத்துலட்சுமியை திருமணம் செய்துகொள்ள டாக்டர் சுந்தர்ரெட்டி விருப்பம் தெரிவித்தபோது, மூன்று நிபந்தனைகளை அம்மையார் விதித்தார்.
1. தம்மை சரிசமமாக நடத்த வேண்டும்.
2. தன் சொந்த விருப்பங்களுக்குக் குறுக்கே நிற்கக் கூடாது.
3. தம்மை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
சுந்தர்ரெட்டி இவற்றுக்கு இணங்கிய பிறகே 1914 ஏப்ரலில் ‘தியாசபிகல் சொசைட்டி (பிரம்ம சமாஜ) சட்டத்தின்படி திருமணம் நடந்தது. முத்துலட்சுமி திருமதி ஆனார். ராம்மோகன், கிருஷ்ணமூர்த்தி என்கிற இரண்டு மகன்களைப் பெற்றார்.
அவரது கணவருக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணி மாற்றலாக, முத்துலட்சுமி புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தார். அந்த நேரத்தில் அவரது தங்கைக்கு புற்றுநோய் தாக்க… தான் ஒரு மருத்துவராக இருந்தும் அவரைக் காப்பாற்ற முடியாமல் பதறினார்.
புற்றுநோய் எனும் உயிர்க்கொல்லி நோயிலிருந்து இனி யாரையும் சாகவிடக் கூடாது என்கிற எண்ணம் அவருக்குள் உறுதியானது. 1925_ல் கணவர், குழந்தைகளுடன் லண்டனுக்குச் சென்று அங்கே செல்சியா மருத்துவமனையில் தாய், சேய் மருத்துவ ஆராய்ச்சியும், இராயல் புற்றுநோய் மருத்துவமனையில் புற்று நோய் பற்றிய ஆராய்ச்சியும் செய்ய ஆரம்பித்தார்.
அதோடு அங்கே நாற்பத்திரண்டு நாடுகள் கலந்துகொண்ட மகளிர் மாநாட்டில் இவரும் இந்திய மாதர் சங்கப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். அப்போது… உலகம் முழுக்கப் பெண்களுக்குச் சுதந்திரம் மறுக்கப்படுவதும், ஆண்கள் ஆதிக்கத்தால் பெண்கள் அடிமைகளாய் கட்டுண்டு கிடப்பதும், பெண்கள் வெறும் போகப்பொருள் என்கிற நிலையிலிருப்பதும் அவருக்குள் ஒரு புரட்சித் தீயை உருவாக்கியது.
இங்கிலாந்திலிருந்து புற்றுநோய்க்கான ஆராய்ச்சியை முடித்துவிட்டு இந்தியா திரும்பியதும் இந்திய மாதர் சங்கம் அவரை அரசியல் களத்திற்குள் இறக்கிவிட்டது. முத்துலட்சுமியின் வீரமும், விவேகமும் அவரை இந்தியத் திருநாட்டின் முதல் சட்டசபை உறுப்பினராக்கியது.
அந்த உறுப்பினர் எனும் கவசத்தால்… ‘தேவதாசி…’ ‘பெண் அடிமை’ ‘பால்ய வயதுத் திருமணம்’ எனும் பேய்களை ஓட்டினார்.
எல்லாவற்றிற்கும் மேலே… புற்றுநோய் நிவாரண மருத்துவமனையை அவர் சார்ந்திருந்த மாதர் சங்கம் சென்னையில் தொடங்கியது. அன்று சென்னை அடையாறில் தொடங்கப்பட்ட அந்தப் புற்றுநோய் மருத்துவமனை, இன்று பல்லாயிரக்கணக்கான புற்றுநோய் நோயாளிகளின் உயிர் காக்கும் தோழியாகச் செயல்பட்டு வருகிறது.
1954_ல் பன்னிரெண்டு படுக்கைகளோடு தொடங்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இன்று புற்றுநோய் ஆய்வு மையம், புற்றுநோய் தடுப்பு, டாக்டர் முத்துலட்சுமி புற்றுநோய் அறிவியல் துறை கல்லூரி… என விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இன்று அந்த மருத்துவமனையில் பயன்பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை வருடத்திற்கு எண்பதாயிரம் பேர்.
பெண் விடுதலைக்காகவும்.. ஏழை, எளிய மக்களுக்காகவும் தனது வாழ்வின் பெரும்பகுதியைச் செலவழித்த முத்துலட்சுமி ரெட்டிக்கு 1937_ம் வருடம் சென்னை மாநகரத் தலைமையாரால் ‘ஆல்டர் வுமன்’ என்கிற பட்டம் வழங்கப்பட்டது. இது மட்டுமன்றி 1956_ல் இந்திய அரசின் பத்மபூஷண் விருதுக்கும் அவர் சொந்தக்காரர் ஆனார்.
1936_ல் சென்னை அடையாறில் குடியேறிய பிறகு.. முழு நேர மருத்துவ உதவிகளோடு.. மீனவக் குழந்தைகளின் கல்விக்காகவும் பாடுபட்டார். நூலகங்களை உருவாக்கினார். டாக்டர் சௌந்திரம் இராமச்சந்திரன் துணையோடு காந்திகிராமப் பணிகளைத் தொடங்கினார்.
தனது இறுதி மூச்சு உள்ளவரை பொதுநலமும்.. பெண்களின் சுதந்திர வாழ்க்கையுமே அவரின் ஒரே மூச்சாக இருந்தது. 1968_ம் வருடம் தனது 82_வது வயதில் அந்த இதயம் நின்றபோது, அவருக்காக பல ஆயிரம் இதயங்கள் துடித்தன். கண்கள் கண்ணீர் விட்டன.
டாக்டர் முத்துலட்சுமி மறைந்தாலும் அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் அவர் ஆன்மா வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு பெரிய கட்டுரை என்றாலும், இதைப் படித்ததும் நமக்கு எத்தனை விஷயங்கள் விளங்குகிறது. எந்த வாய்ப்பும் இல்லாமல், தனது சொந்த முயற்சியால் முன்னேறிய முத்துலட்சுமி நமக்கெல்லாம் வழிகாட்டியாக விளங்குகிறார்.