10.12.13

2ஜி ஜேபிசி அறிக்கை விவாதமின்றித் தாக்கல் எதிர்க்கட்சிகள் அதிருப்தி: திமுக வெளிநடப்பு


2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் (ஜே.பி.சி.) விசாரணை அறிக்கை விவாதமின்றி மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு பாஜக, இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர். திமுக உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

 தெலங்கானா, முசாபர்நகர் நிவாரண முகாம் விவகாரம், இலங்கை விவகாரம் ஆகியவற்றை மக்களவையில் பல்வேறு அரசியல் கட்சி உறுப்பினர்களும் திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு துறைகளின் நிலைக் குழு அறிக்கைகளை அவற்றின் தலைவர்கள் தாக்கல் செய்தனர்.
 அப்போது பேசிய மீரா குமார், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, விலை நிர்ணயம் ஆகியவை தொடர்பான அறிக்கையின் சில அம்சங்களுக்கு ஆட்சேபம் தெரிவித்து பாஜக உறுப்பினர் யஷ்வந்த் சின்ஹா, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குருதாஸ்தாஸ் குப்தா, கல்யாண் பானர்ஜி ஆகிய உறுப்பினர்களிடம் இருந்து எனக்குக் கடிதம் வந்துள்ளது. ஆனால், ஜேபிசி குழுவின் நோக்கம் அதன் விசாரணை அறிக்கையை அவையில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதாகும். அதனால், விதிகளின்படி அறிக்கை மீது எவ்வித விவாதமுமின்றி தாக்கல் செய்ய ஜேபிசி தலைவரை அனுமதிக்கிறேன் என்றார்.
 இதையடுத்து, ஜேபிசி தலைவர் சாக்கோ தனது அறிக்கையை முறைப்படி தாக்கல் செய்தார்.
 இந்த நடவடிக்கைக்கு நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்தனர். ஒருதலைப்பட்சமான அறிக்கையை தாக்கல் செய்ய அனுமதிக்கக் கூடாது என அவர்கள் குரல் கொடுத்தனர். ஆனால், அதற்குள்ளாக அறிக்கையை தாக்கல் செய்து விட்ட சாக்கோவின் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, ஏ.கே.எஸ். விஜயன், அப்துல் ரகுமான், ஆதிசங்கர், டி.கே.எஸ். இளங்கோவன், எஸ். காந்தி செல்வன், ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், இ.ஜி. சுகவனம், ஆர். தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
  ஜேபிசி அறிக்கை மோசடியானது என்று பாஜக, திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். பின்னர் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அவைக்கு உள்ளே வந்த திமுக உறுப்பினர்கள், ஜேபிசி அறிக்கை மீது விவாதம் நடத்த வேண்டும் என கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். அப்போது திமுக உறுப்பினர்கள் சில காகிதங்களைக் கிழித்து அவையின் மையப் பகுதியில் வீசினர். மறுமுனையில் தெலங்கானா விவகாரத்தை ஆந்திர உறுப்பினர்கள் எழுப்பியபடி இருந்தனர். இதனால், அவையில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து, மக்களவை அலுவலை பிற்பகல் 2 மணி வரை மீரா குமார் ஒத்திவைத்தார்.
  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரி குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான வழக்கை சிபிஐ நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் அலைக்கற்றை ஒதுக்கீடு, விலை நிர்ணயம் ஆகியவை தொடர்பாக விசாரிக்க காங்கிரஸ் மூத்த உறுப்பினர் பி.சி. சாக்கோ தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவை மக்களவைத் தலைவர் மீரா குமார் 2011, மார்ச் 4-ஆம் தேதி நியமித்தார். இக் குழு 19 மாதங்கள் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை இறுதி செய்தது. இதையடுத்து, மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் ஜேபிசி அறிக்கையை அதன் தலைவர் சாக்கோ கடந்த அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி நேரில் அளித்தார். இதைத் தொடர்ந்து, அந்த அறிக்கை மக்களவையில் முறைப்படி திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment