2.12.13

போலீஸ் தலைமையகம் எதிரே டாக்ஸி ஓட்டுநர் மீது துப்பாக்கி சூடு

தில்லி போலீஸ் தலைமையகம் எதிரில் டாக்ஸி ஓட்டுநர் மீது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தூப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் சிசிச்சை  பெற்று வருகிறார்.
 தில்லி ஐடிஓ சந்திப்பு அருகே இந்திரபிரஸ்தா பகுதியில் தில்லி போலீஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இப் பகுதி வாகன நெரிசலுடன் எப்போதும் பரபரப்புடன்  காணப்படுவது வழக்கம்.
 இந் நிலையில், தில்லி போலீஸ் தலைமையகம் அருகே, தனது வாடகைக் காரை  காஜியாபாத்தைச் சேர்ந்த டம்மி (28) ஓட்டி வந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில்  வந்த அடையாளம் தெரியாத இருவர் திடீரென டம்மியை நோக்கித் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த டம்மியை அருகே இருந்த காவலர்கள் போலீஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
 இது தொடர்பாக தில்லி போஸீல் உயர் அதிகாரி கூறியது:
 துப்பாக்கியால் சுடப்பட்ட டாக்ஸி ஓட்டுநரின் நிலைமை சீரடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக  டம்மிக்கும், இரு டாக்ஸி ஓட்டுநர்களுக்கு இடையே கடந்த 22-ஆம் தேதி தகராறு ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. மேலும், அச் சம்பவம் தொடர்பாக இரண்டு டாக்ஸி ஓட்டுநர்கள் மீது கமலா மார்க்கெட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால்,  முன்விரோதம் காரணமாக அந்த இருவரும் டம்மியை சுட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். தலைமறைவாகியுள்ள இருவரையும் தேடி வருகிறோம் என்றார்.

No comments:

Post a Comment