2.12.13

வயிறு குறைய.. ஆயுர்வேத மருந்து


சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பகுதியில் அசைந்து வேலை செய்து கொண்டிருக்கும் ஸமான-அபான வாயுக்களின்சீற்றத்தினால் நீங்கள் துன்பப்படுகிறீர்களா? அல்லது வயிற்றின் தசைப் பகுதிகள் பெருத்திருக்கின்றனவா? போன்ற சந்தேகங்கள் எழுகின்றன. எதுவாக இருந்தாலும் நீங்கள் கொள்ளு மாவை, புளித்த மோருடன் கலந்து சூடாக்கி, காலையில் குளிப்பதற்கு முன்பாக, சுமார் 15 – 20 நிமிடங்கள் கீழிருந்து மேலாகவும், வயிற்றின் வலப்புற அடிப்பகுதியிலிருந்து மேலாகவும், தொப்புளுக்கு மேலாகவும், இடப்புறம் மேலிருந்து கீழாகவும் சூடு பறக்கத் தேய்த்து ஊற வைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும். தேய்த்துக் கொள்ளும்போது வயிறு காலியாக இருக்க வேண்டும். இதனால் ஏற்படும் இரு பெரும் நன்மைகள், வயிற்றின் தோல் பகுதியின் அடியிலுள்ள கொழுப்பும், தேவையற்ற சதையும் குறையும். இரண்டாவது, வாயுவின் சீற்றம் குறைந்து தசைகள்வலுப்பெறும்.
இட்லியும் ரசமும் சாப்பிடுவதால் உங்கள் தொப்பை குறைந்து விட்டது என்பது சற்று ஆச்சரியமான விஷயந்தான். ஏனென்றால் ஆயுர்வேதத்தில் அப்படி ஒரு குறிப்பு எங்கும் காணப்படவில்லை. உங்களுடைய உடற்கூறு வேண்டுமானால் அப்படி ஒரு விசேஷ அமைப்பைப் பெற்றிருக்கலாம். பொதுவாகவே காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை கொண்ட உணவு வகைகளால் மட்டுமே ஊளைச் சதையைக் கரைக்க இயலும் என்றும் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகளால் உடல் தாட்டியாவதாகவும் ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. இட்லி, ரசம் போன்றவை இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை கொண்டவை. அதனால்தான் குழப்பம்.
நீங்கள் ஒரு ஸ்பூன் தேனை அரை கிளாஸ் சாதாரண அதாவது சூடு இல்லாத தண்ணீரில் கரைத்து காலை இரவு உணவிற்குப் பிறகு சாப்பிட, வயிறு குறைந்து விடும். பகல் தூக்கம் தவிர்க்கவும்.
சில உடற்பயிற்சிகள் உங்களுக்கு உதவிடலாம். பச்சிமோத்தாஸனம் எனும் பயிற்சி இது. கீழே உட்கார்ந்து கொண்டு கால்களை நீட்டிக் கொள்ளவும். பிறகு ஆள்காட்டி விரலினால் கால்கட்டை விரல்களைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு சிறிது சிறிதாகத் தலையை முழங்கால்களின் நடுவே வரும் வரையில் முயற்சி செய்ய வேண்டும். முழங்கால்களை மேலே தூக்கக் கூடாது. இந்நிலையில் 2-3 நிமிடங்கள் இருக்கலாம். இதை 5-6 தடவைகள் செய்யலாம். இதைச் செய்வதால் தொடையிலிருக்கும்தசைகள் வலிவடைகின்றன. இடுப்புக்கு மேலிருக்கும் தசைகளும் வலிவடைகின்றன. முதுகெலும்பு வளைக்கப்படுவதால் அது தளர்ந்து கெட்டியாகாமலிருக்கிறது.
வயிற்றிலிருக்கின்ற கல்லீரல், மண்ணீரல் முதலிய உறுப்புகள் சுத்தப்படுத்தப்பட்டு நன்றாக வேலை செய்கின்றன. வயிற்றின் மேல்புற- கீழ்ப்புறத்திலிருக்கின்ற கொழுப்பு கரைந்து வயிறு குறைந்துவிடுகிறது. இதில் நிமிரும் நிலையில் மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். குனிகின்ற நிலையில் மூச்சை வெளியே விட வேண்டும்.
யோகமுத்ரா- பத்மாசனத்திலிருந்து கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு, மெதுவாகத் தலையைக் கீழே கொண்டு வந்து நெற்றியைப் பூமியில் பதிய வைக்க வேண்டும். 1- 2 நிமிடங்கள் வைத்திருந்து நிமிரவும். 5-6 தடவைகள் செய்யலாம். கழுத்து – முதுகுப் பகுதியிலுள்ள தசை நார்கள் வலுவடையும். அடி வயிற்றுக் கொழுப்புக் கரையும். சிறுநீர்ப்பையும் அதைச் சுற்றியுள்ள கிரந்திகளும் வலிவடைகின்றன.
வாயுவையும் அடிவயிற்றுச் சதையையும் கரைக்க ஆயுர்வேத மருந்தாகிய வரணாதி கஷாயத்தைக் காலை மாலை வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் தேன் கலந்து சுமார் 48 நாட்கள் சாப்பிடவும்.

No comments:

Post a Comment