2.12.13

இலங்கை பிரச்னையில் மக்களை திசைதிருப்ப காங்கிரஸ் நாடகம் நடத்துகிறது: இல. கணேசன்


பா.ஜ.க மூத்த தலைவர் இல. கணேசன்

தேர்தல் நெருங்குவதால் இலங்கைத் தமிழர் பிரச்னையில் மக்களை திசைதிருப்ப காங்கிரஸ் நாடகம் நடத்த தொடங்கியுள்ளது என்று பாஜகமூத்த தலைவர் இல. கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும் என்ற தலைப்பில் பேசிய ப. சிதம்பரம், இலங்கை அரசைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதை எதிர்த்த பாஜகவா இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை செய்யப் போகிறது என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தாம்பரத்தை அடுத்த மேடவாக்கத்தில் வீடுதோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரை என்ற பாஜக பாத யாத்திரையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இலங்கைத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் அரசின் தவறுகளை மறைப்பதற்காக திடீரென குற்றம்சாட்டியுள்ளார். இப்பிரச்னையில் ஆரம்பம் முதல் தமிழர்களுக்கு ஆதரவாகவே பாஜக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்கினால் அது இந்தியாவுக்கு எதிராகவே பயன்படுத்தப்படும்.அதுபோல இலங்கைக்கு இந்தியா ஆயுதம் வழங்கினால் அது தமிழர்களைக் கொல்லவே பயன்படும் என்பதை பாஜக உணர்ந்து இருந்தது. அதனால் தான் பாஜக ஆட்சியின்போது இலங்கை அரசு பஸறை வற்புறுத்தியும் ஆயுதங்களை வழங்க வாஜ்பாய் மறுத்தார். அதோடு இலங்கை ராணுவ வீரர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கவும் பாஜக ஆட்சியில் மறுக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.
பாஜக மீது குற்றம்சாட்டிய ப. சிதம்பரம், இலங்கைக்கு செய்யப்பட்ட ஆயுத உதவி, ராணுவ உதவி மற்றும் தமிழக மீனவர் பிரச்னை பற்றி எதுவும் பேசாதது ஏன்காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பிரிட்டன் பிரதமருக்கு இருந்த தைரியம் கூட நமது பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
தேர்தல் நெருங்குவதால் இலங்கைத் தமிழர் பிரச்னையில் மக்களை திசைதிருப்ப காங்கிரஸ் நாடகம் நடத்த தொடங்கியுள்ளது. அதனை ப. சிதம்பரம் சென்னையில் தொடங்கியுள்ளார்.இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச 100 சதவீதம் பொறுப்பு என்றால் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு 50 சதவீத தார்மீக பொறுப்பு உள்ளது.உண்மைகளை மறைக்க மற்றவர்கள் மீது குற்றம்சாட்டுவதை ப. சிதம்பரம் தவிர்க்க வேண்டும் என்றார் இல. கணேசன்.

No comments:

Post a Comment