7.12.13

இந்தியாவுக்குப் பணிந்தது உலக வர்த்தக அமைப்பு



இதன் மூலம் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் இடையிலான நான்கு நாள் பேச்சுவார்தையில் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது.இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்று வரும் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில், இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை ஏற்று, உறுப்பு நாடுகள் வழங்கும் விவசாய மானியங்களின் மீது கட்டுப்பாடு விதிக்கும் முயற்சியை உலக வர்த்தக அமைப்பு கைவிட்டது.
உலக வர்த்தக அமைப்பின் விவசாயம் தொடர்பான வரைவு ஒப்பந்தத்தில், உணவு தானியங்களுக்கு அளிக்கப்படும் மானியத்துக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தங்களது உணவுப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், அத்திட்டங்கள் முழுமையாக செயல்படும் வரை மானியக் கட்டுப்பாட்டை முழுமையாகக் கைவிட வேண்டும் என வளரும் நாடுகள் வலியுறுத்தி வந்தன.
ஆனால், விவசாய மானியக் கட்டுப்பாட்டை நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் நிறுத்தி வைக்கலாம் என்று வளரும் நாடுகள் கூறி வந்தன.
இதனை அடியோடு மறுத்த இந்தியா, இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை விவசாய மானியக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வந்தது.
இந்தியத் தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா வியாழக்கிழமை கூறுகையில், ""விவசாய மானிய உச்ச வரம்புப் பிரச்னைக்கு தற்காலிகத் தீர்வு அளிக்கும் விதத்திலான ஒப்பந்தத்தை ஏற்பதை விட, ஒப்பந்தமே செய்துகொள்ளாமலிருப்பது நல்லது'' என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இந்நிலையில், விவசாய மானிய உச்ச வரம்பை மீறும் நாடுகளின் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்யும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தை உலக வர்த்தக அமைப்பின் 159 உறுப்பு நாடுகள் வெள்ளிக்கிழமை மேற்கொண்டன.
மேலும், வளரும் நாடுகள் தங்களுக்குத் தேவையான அளவு தானியங்களை கையிருப்பு வைத்திருக்கவும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் வகை செய்ப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தால், உலகளாவிய வர்த்தகம் 1 லட்சம் கோடி டாலர் (சுமார் ரூ.61,43,000 கோடி) அளவுக்கு உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆனந்த சர்மா இது குறித்து கூறுகையில், ""இந்தியாவுக்கு இது மிகவும் பெருமைக்குரிய நாள். உலக விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தத்தை இந்தியா பெற்றுத் தந்துள்ளது'' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment