7.12.13

பொங்கல் ரயில்கள்: ஜனவரி முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்தார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தெற்கு ரயில்வே பொதுமக்கள் பாதுகாப்பு படையின் ஆண்டு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்து கூறியதாவது:
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கும் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்தச் சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.
ரயில் நிலைய பாதுகாப்பு:தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட 14 முக்கிய ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. முக்கியமாக சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தக் கேமராக்கள் மூலம் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இரு வழிப்பாதை திட்டம்: திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்ட ஊர்களுக்கு போதுமான ரயில் இல்லை என்று பொது மக்கள் கருதுகின்றனர். தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் பாதைகள் ஒரு வழிப்பாதையாக உள்ளன. இன்னும் முக்கிய சந்திப்புகளில் இரு வழிப்பாதைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாகத்தான் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படாமல் உள்ளது.
ராயபுரம் ரயில் முனையம்: ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றுவதற்கு இடபற்றாக்குறை உள்ளன.
மேலும், இந்த ரயில் நிலையத்தின் பாரம்பரிய கட்டடத்தை இடிக்காமல், முனையமாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தெற்கு ரயில்வேயின் சார்பில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குச் சொந்தமான சிறிது இடமும் கேட்கப்பட்டுள்ளன. ராயபுரத்தில் முனையம் அமைக்க வாய்ப்பில்லாத சூழ்நிலையில் கொருக்கப்பேட்டையை முனையமாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர். விழாவில், பொதுமக்கள் பாதுகாப்புப் படையினர் அவசர காலத்தில் மக்களுக்கு உதவுவது குறித்த ஒத்திகை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட உதவி மேலாளர் மோகன் ராஜா, தெற்கு ரயில்வே துணைப் பொது மேலாளர் பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment