செல்வராகவனின் பிரமாண்ட படமான இரண்டாம் உலகம் தந்த அதிர்ச்சியே ரசிகர்களை விட்டு விலகாத நிலையில், செல்வராகவனுக்கு ஒரு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார்.
சினிமா நிகழ்ச்சி மேடைகளில் பரபரப்பான, ஆனால் மனதில் படும் கருத்துக்களைப் பேசி வரும் அவர், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், இனி இரண்டாம் உலகம் மாதிரி படங்களை எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வரக் கூடாது என அதிரடியாகப் பேசியுள்ளார்.
ஜிவி பிரகாஷ் தயாரிக்கும் மதயானைக் கூட்டம் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கேயார் பேசுகையில், "சமீபத்தில் பல படங்கள் நல்ல படங்களாக வெளிவருகின்றன. சந்தோஷமாக இருக்கிறது.
சவாலாக எடுத்துக்கொண்டு புதுமுகங்களை அறிமுகப்படுத்திய பெருமை பாரதிராஜாவுக்கு உண்டு. இப்போதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் புதிய படங்களை எடுக்கிறார்கள்
ஆனால் அவ்வப்போது வேதனை தரக்கூடிய படங்களும் வருகின்றன.
சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தை , கிட்டத்தட்ட 66 கோடி போட்டு கார்பரேட் நிறுவனம் எடுத்திருக்கிறது. பிரமாண்டம் என்ற பெயரில் இந்த மாதிரி படங்களை எடுக்க கார்ப்பரேட்டுகள் முன் வரக்கூடாது. இப்படி படமெடுத்து சினிமாவை சீரழிக்க வேண்டாம். தொடர்ந்து கார்பரேட் கம்பெனிகள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் சங்கங்களை ஆலோசித்து நடவடிக்கை எடுக்க நேரிடும்.
வெளியே திறமையோடு பல உதவி இயக்குநர்கள் இருக்கிறார்கள். இந்தப் பணத்தில் அவர்களில் பலருக்கு நல்ல வாய்ப்பை கொடுக்கலாம். சினிமா நன்றாக இருக்க இதைத்தான் செய்ய வேண்டும்," என்றார் அதிரடியாக.
திரையுலகில் முக்கியப் பொறுப்பிலிருக்கும் கேயாரின் இந்தப் பேச்சு செல்வராகவன், பிவிபி சினிமாஸ் உள்ளிட்ட பலருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
ஒரு படத்துக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பகிரங்கமாக குற்றம்சாட்டிப் பேசியிருப்பதும் இதுவே முதல்முறை!
No comments:
Post a Comment