27.11.13

பிரமாண்டங்களுக்கு ஓய்வு... அடுத்து சிறு பட்ஜெட் படங்கள்தான் - செல்வராகவன் முடிவு

சென்னை: இயக்குநர் செல்வராகவன், அடுத்தடுத்து இரு சிறிய பட்ஜெட் படங்களை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
செல்வராகவன் மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு பெரும் செலவு வைக்கிறார், அதை விட அதிக காலத்தைக் கடத்துகிறார் என்பது.
ஆனால் ஒரு படைப்பாளியாக சுதந்திரமாக இயங்க இவை தேவை என்பது செல்வா வாதம்.


இந்த வாதங்கள் 7 ஜி ரெயின்போ காலனியிலிருந்து தொடர்கிறது. அந்தப் படத்தின் பட்ஜெட்டை மீறி படமெடுத்ததால், படம் வெற்றிகரமாக ஓடியும் தனக்கு லாபமில்லை என ஏஎம் ரத்னம் புலம்பியது நினைவிருக்கலாம்.
ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற படங்கள் கோடிகளை விழுங்கியதுடன், அதிக நாட்களும் எடுத்துக் கொண்டன. இந்த மாதிரி படங்களை எடுக்க இன்னும் கால அவகாசம் தேவை என்பது படைப்பாளியின் பார்வையில் சரியாக இருந்தாலும், தயாரிப்பாளர்களை பயமுறுத்தும் வட்டிதான் இங்கு நடைமுறைப் பிரச்சினையாக உள்ளது. ஆயிரத்தில் ஒருவன் தயாரிப்பாளரால் மீண்டும் படமெடுக்க முடியவில்லை.
பிவிபி காரர்களுக்கு பிரச்சினையில்லை. அவர்களின் பணக்காரப் பின்னணி உலகறிந்தது.
இந்த நிலையில் இரண்டாம் உலகத்துக்குப் பிறகு, அநேகமாக சொந்தப் படம் எடுப்பார் செல்வராகவன் என்று கூறப்படுகிறது.
அதை உறுதிப்படுத்துவது போல, அவரே ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
'குறைந்த பட்ஜெட்டில் சில படங்களைச் செய்ய விரும்புகிறேன். அதில் முதலாவதாக ஒரு ஆக்ஷன் படம் எடுக்கப் போகிறேன். மற்ற விவரங்களை விரைவில் சொல்கிறேன்' என்று கூறியுள்ளார் செல்வா.

No comments:

Post a Comment