சென்னை: படைப்பு ரீதியாக என் வீர்யம் இன்னும் விறைப்பாகவே உள்ளது என்றார் இயக்குநர் பாலு மகேந்திரா.
பாலு மகேந்திராவின் அடுத்த உதவி இயக்குநரும் படம் இயக்க வந்துவிட்டார்.
இவர் விக்ரம் சுகுமாறன். வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தின் வசனகர்த்தா.
விக்ரம் சுகுமாறன் இயக்கியுள்ள மதயானைக் கூட்டம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாலா, வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்துகொண்டு பேசினர்.
பாலு மகேந்திரா பேசுகையில், "என்னுடைய குடும்பத்திலிருந்து இன்னும் ஒரு இளைஞன் இயக்குனராக வந்திருக்கிறார். இயக்குனர் விக்ரம் சுகுமாறன் என்னுடைய பிள்ளைகளில் ஒருவன் என்பதில் எனக்கு கர்வம் இருக்கிறது.
1999-2000 வருடங்கள் தான் என் படைப்பு வாழ்வில் மிக மிக சந்தோஷமான, நிறைவான, திருப்தியான காலகட்டங்கள் என நான் நினைக்கிறேன். அந்த சமயத்தில் விக்ரம் சுகுமாறன், சுரேஷ், கௌரி உள்ளிட்ட என் பிள்ளைகள் இல்லையென்றால் நான் அந்த சமயத்தில் சிறந்த குறும் படங்களைச் செய்திருக்க முடியாது.
என் கிராமத்தில் ஒரு பழக்கம் இருக்கிறது. திருமணம் செய்து கொடுத்த பிள்ளைகள் குழந்தை பெற ஆரம்பித்துவிட்டால், பெற்றோர்கள் குழந்தை பெறுவதை நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் என் பிள்ளைகளும் குழந்தை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனக்கும் இன்னும் படைப்பு ரீதியான வீரியம் விறைப்பாக இருப்பதால் நானும் குழந்தை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.
நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று சில சமயங்களில் தோன்றும். ஆனால் சினிமாவை நிறுத்திக்கொண்டால் என் மூச்சு நின்றுவிடும் என்று தெரிந்ததால் நிறுத்திக் கொள்ளவில்லை. என் பிள்ளைகளுடன் நானும் போய்க் கொண்டே இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனக்கு கீழே இருந்தவர்களை இப்போது நான் நிமிர்ந்து பார்க்கிறேன். இதைவிட ஒரு தகப்பனுக்கு ஒரு சந்தோஷம் என்ன இருக்க முடியும். பாலா, வெற்றிமாறன், விக்ரம், சுரேஷ், சீனுராமசாமி எல்லோரும் என்னுடன் இருக்கிறார்கள். எனது தோட்டத்தில் விளைந்த விதைகள் நல்ல விதைகளாக இருந்தன. நான் சிறிது நீர் ஊற்றியதும் அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். நான் அவர்களை உருவாக்கவில்லை. அவர்களே தங்களை உருவாக்கிக்கொண்டனர்," என்றார்.
No comments:
Post a Comment