2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் தவறுகளை ஜேபிசி குழுத் தலைவர் பி.சி. சாக்கோ மூடி மறைத்துள்ளார் என்று பாஜக ஆட்சிமன்றக் குழுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை பாஜக ஆட்சிமன்றக் குழுக் குழு கூடி விவாதித்தது. நாடாளுமன்ற பாஜக குழுத் தலைவர் எல்.கே. அத்வானி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி, மூத்த உறுப்பினர்கள் யஷ்வந்த் சின்ஹா, முரளி மனோகர் ஜோஷி, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
"ஜேபிசி அறிக்கை முழுமையானதாக இல்லை; அதனால், அதை நிராகரிக்க வேண்டும்' என்று மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் பாஜக, திமுக, இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் கடிதம் எழுதி வலியுறுத்தியது குறித்து ஆட்சிமன்றக் குழு விவாதித்தது. இந்த விவகாரத்தில் ஜேபிசி தலைவரின் செயல்பாடு கடும் கண்டனத்துக்குரியது என்று உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, வரும் நாள்களில் அவரைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்ப வேண்டும் என்று பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் ரவிசங்கர் பிரசாத் கூறியது:
"ஜேபிசி தலைவர் சாக்கோ, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான அறிக்கையை காங்கிரஸ் கட்சிக்கு சாதமாகத் தயாரித்துள்ளார். அந்த விவகாரத்தில் தொடர்புடைய மத்திய முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவை விசாரிக்க வேண்டும் என்று பாஜக, இடதுசாரிக் கட்சிகள் கோரின. ஆனால், அதைக் கவனத்தில் கொள்ளாத சாக்கோ, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த ஆட்சேபக் குறிப்பையும் தனது வசதிக்கு தகுந்தது போல திருத்தியுள்ளார். இதன் மூலம் நாடாளுமன்ற அமைப்பான ஜேபிசி மீது உறுப்பினர்கள் வைத்துள்ள நம்பிக்கையை சாக்கோ தகர்த்துள்ளார். இனி வரும் நாள்களில் தொடர்ந்து இப் பிரச்னையை பாஜக உறுப்பினர்கள் எழுப்பவர்' என்றார்.
அறிக்கை மீது விவாதம் தேவை: ஆ. ராசா நோட்டீஸ்
2ஜி அலைக்கற்றை தொடர்பாக ஜேபிசி தலைவர் பி.சி. சாக்கோ தயாரித்த அறிக்கை குறித்து அவை விதி 193-ன் கீழ் விவாதிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆ. ராசா நோட்டீஸ் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மக்களவைச் செயலர் பால்சேகருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள நோட்டீஸில், "முழுமை பெறாத, முன்னுக்குப் பின் முரணாக ஜேபிசி அறிக்கை அமைந்துள்ளது. போதிய ஆதாரங்கள் இருந்தும் அதை கவனத்தில் கொள்ளாமல், அந்த அறிக்கையை ஜேபிசி தயாரித்துள்ளது. இதன் மூலம் நாடாளுமன்றச் செயல்பாடு மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும்' என்று நோட்டீஸில் ராசா கேட்டுக் கொண்டுள்ளார். அவரது கோரிக்கையை ஆதரித்து திமுக உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் நோட்டீஸில் கையெழுத்திட்டுள்ளனர்.
No comments:
Post a Comment