திருவள்ளூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இம்மாவட்டத்தில் தாட்கோ மூலம் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு டிசம்பர் 6 முதல் 22-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதில், பெண்களுக்கான நிலம் வாங்கும் திட்டம், ஆண், பெண் இருவருக்கும் நிலம் மேம்பாட்டு திட்டம், தொழில் முனைவோர் திட்டம், பெட்ரோல், டீசல், கேஸ் சில்லறை விற்பனை நிலையம், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டம், மருத்துவமனை, மருந்துக் கடை, மூக்கு கண்ணாடியகம், முடநீக்கு மையம், ரத்தப் பரிசோதனை நிலையம், மகளிர் குழுவினருக்கான சுழல் நிதி மற்றும் பொருளாதார கடனுதவி, விருப்புரிமை நிதி, இந்திய குடிமைப் பணி முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, பட்டயக் கணக்கர், செலவு கணக்கர்கள் சொந்தமாக தொழில் செய்ய நிதியுதவி போன்ற தொழில்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.
தகுதிகள்: விண்ணப்பதாரர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும். பெட்ரோல், டீசல், கேஸ் சில்லறை விற்பனை நிலையம் அமைக்க ரூ. 3 லட்சம் வரை குடும்ப ஆண்டு வருமானம் இருக்கலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் http:application.tahdco.com என்ற இணையதள முகவரியில் ஆன் லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதில் பதிவு செய்யும்போது ரேஷன் கார்டு எண் அல்லது இருப்பிடச் சான்று, ஜாதிச் சான்று, வருமானச் சான்று ஆகியவற்றின் எண் மற்றும் அதை வழங்கிய நாள், திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் தங்களது புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அல்லது மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் ரூ. 20 செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து அந்த அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment