கண்களைக் கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டும் இந்த சின்னஞ்சிறுவன் ஒரு தீவிர ரஜினி ரசிகன்... ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவன். பெயர் அரவிந்த்.
ஏழாம் வகுப்பு படிக்கும் இந்த சிறுவன், சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாளையொட்டி புகைப் பழக்கத்துக்கு எதிராக ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரமாக இப்படி முகம் முழுவதையும் மூடிக் கொண்டு 7 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டான். அவனைப் பின் தொடர்ந்து ரஜினி ரசிகர்களும் வாகனங்களில் சென்றனர்.
ரஜினியின் உருவப்படம் பொறித்த பனியன் அணிந்து சாலையில் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் இந்த தூரத்தை அந்த சிறுவன் கடந்தது பார்ப்பவர்களை வியப்பின் உச்சிக்கு கொண்டு சென்றது.
ஸ்ரீரங்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை ஸ்ரீரங்கம் நகர ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்றம் செய்திருந்தது.
'புகைப்பழக்கத்தை விட்டொழிக்குமாறு மக்களுக்கு தலைவர் ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது வேண்டுகோளை எங்களால் முடிந்த அளவு பிரச்சாரமாக்கியுள்ளோம். இதுபோன்ற பிரச்சாரங்களை தொடர்ந்து செய்வோம். தலைவர் சொன்ன அறிவுரையைக் கேட்டு பலரும் ஏற்கெனவே புகைப்பழக்கத்தை விட்டுவிட்டார்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்," என்றனர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரஜினி மன்ற நிர்வாகிகள்.
7 கிலோமீட்டர் தூரம் முகத்தை மூடியபடி சைக்கில் ஓட்டி வியக்க வைத்த சிறுவன் அரவிந்த்தின் தந்தையும் தீவிர ரஜினி ரசிகர். ஸ்ரீரங்கம் மன்ற நிர்வாகி.
முன்னதாக ரஜினி பிறந்த நாளையொட்டி, ஸ்ரீரங்கம் ஸ்ரீராகவேந்திரர் மடத்தில் தங்கத் தேர் இழுத்தனர் ரசிகர்கள். பின்னர் 1000 பேருக்கு மண்டபத்திலேயே அறுசுவை உணவு பரிமாறினர்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் நற்பணி மன்ற நிர்வாகிகள் எஸ் கர்ணன், தென்னூர் உதயா, ராயல் ரம்பா செந்தில், ஆர்கேஎஸ் ராஜ், ராயல் ராஜ், திருச்சி ரஞ்சித் குமார், ஸ்வீட் ரமேஷ், ஆட்டோ வேலு, ஆர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி மேலும் பல நற்பணி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர் இந்த நிர்வாகிகள்.
No comments:
Post a Comment