நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி கணிசமான வெற்றியைப் பெற்று ஆட்சியமைக்கும் நிலையில் உள்ளது. தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வென்று தனிப்பெருங்கட்சியாக உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பாராத அளவில் படுதோல்வி அடைந்துள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தில்லி, மிஸோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு வாக்குப்பதிவு நடந்தது. மிஸோரம் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மிஸோரம் மாநிலத்தில் திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
பிரதமர் பதவி வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்து தேர்தலை சந்தித்த பா.ஜ.க.வுக்கு இந்த தேர்தலில் அபார வெற்றி கிடைத்துள்ளது. மத்தியப் பிரதேசத்திலும், சத்தீஸ்கரிலும் அக்கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது. தில்லியில் ஆளும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து அங்கு அதிக இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக பா.ஜ.க. உள்ளது. தில்லி தேர்தலில் இரண்டாவது இடம் பிடித்த ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போவதாக கூறியிருப்பதால் அங்கும் பா.ஜ.க. ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இங்கு மொத்தம் உள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 199 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. 162 இடங்களை வென்று அறுதிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. சுயேச்சைகள் 7 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 3 இடங்களிலும், இதர கட்சிகள் 6இடங்களிலும் வென்றுள்ளன.
மாநில பாஜ.க. தலைவரும் முதல்வர் வேட்பாளருமான வசுந்தரா ராஜே சிந்தியா, தாம் போட்டியிட்ட ஜல்ராபடான் தொகுதியில் எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி சந்திராவத்தை 60,896 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். மாநில முதல்வர் அசோக் கெலாட், சாரதாபுரா தொகுதியில் தமக்கு அடுத்தபடியாக வந்த பா.ஜ.க. வேட்பாளர் சாம்புசிங் கோடாசாரைவிட 18,478 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது. மொத்தம் உள்ள 230 தொகுதியில் பா.ஜ.க. 165 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 58 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 4 இடங்களிலும் சுயேச்சைகள் 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தாம் போட்டியிட்ட புத்னி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மகேந்திர சிங் சௌஹானைவிட 84,805 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். விதிஷா சட்டப்பேரவைத் தொகுதியிலும் அவர் வெற்றிபெற்றுள்ளார். இத்தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சஷாங் பார்கவா, சிவராஜ் சிங் சௌஹானைவிட 16,966 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தார்.
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதலில் இழுபறி நிலை நீடித்த போதிலும், பின்னர் பா.ஜ.க. கூடுதல் இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது. இங்கு மொத்தம் 90 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. 49 இடங்களையும், காங்கிரஸ் 39 இடங்களையும் பகுஜன் சமாஜ், சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளனது.
மாநில முதல்வர் ரமண் சிங், ராஜ்நந்த்கான் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அல்கா முதலியாரைவிட 35,866 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். ரமண்சிங் 86,797 வாக்குகளும், அல்கா முதலியார் 50,931 வாக்குகளும் பெற்றனர்.
நக்ஸலைட் ஆதிக்கம் நிறைந்த பஸ்தர் பகுதியில் மொத்தம் உள்ள 12 தொகுதிகளில் 8 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த 5 அமைச்சர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பா.ஜ.க. 31 இடங்களில் வென்று அதிக இடங்கள் வென்ற தனிப்பெரும் கட்சியாக உள்ளது. அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களில் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆளும் கட்சியான காங்கிரஸ் வெறும் 8 இடங்களில் வென்று தோல்வியைத் தழுவியது. பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான அகாலி தளம் ஒரு இடத்திலும், ஐக்கிய ஜனதாதளம் ஒரு இடத்திலும் சுயேச்சை ஒரு இடத்திலும் வென்றுள்ளன.
மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை முதல் முறையாக களம் இறங்கிய அரவிந்த் கேஜரிவால் தோல்வி அடையச் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஷீலா தீட்சித்தை விட கேஜரிவால் 25,864 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார். கேஜ்ரிவாலுக்கு 44,269 வாக்குகளும், ஷீலா தீட்சித்துக்கு 18,405 வாக்குகளும் கிடைத்தன. பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட விஜேந்தர்குப்தா 17,952 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையே பிடித்தார். கிருஷ்ணா நகர் தொகுதியில் பா.ஜ.க. முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்ட ஹர்ஷ வர்த்தன் 69,222 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வினோத்குமார் மோங்காவுக்கு 26,072 வாக்குகளே கிடைத்தன.
இதனிடையே மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தில்லி ஆகிய நான்கு மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியமைப்பது உறுதி என்று அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஆட்சியமைப்பது குறித்து விவாதித்து முடிவு செய்ய நான்கு மாநிலங்களுக்கும் கட்சியின் மேலிடப் பார்வையாளர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுஷ்மா ஸ்வராஜ், ராஜீவ் பிரதாப் ரூடி, அனந்தகுமார் மூவரும் மத்தியப் பிரதேசத்துக்கும், வெங்கய்ய நாயுடு, ஜே.பி.நத்தா, தர்மேந்திர பிரதான் மூவரும் சத்தீஸ்கர் மாநிலத்துக்கும் அருண் ஜேட்லி, அமீத் ஷா, கப்தான் சிங் சோலங்கி மூவரும் ராஜஸ்தானுக்கும், நிதின் கட்கரி, தவார்சந்த் கெலோட் ஆகிய இருவரும் தில்லிக்கும் மேலிடப் பார்வையாளர்களாக அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ராஜஸ்தான்
மொத்தம் 200
பாஜக 162
காங்கிரஸ் 21
சுயேச்சை 7
மற்றவை 9
மத்தியப் பிரதேசம்
மொத்தம் 230
பாஜக 165
காங்கிரஸ் 58
பகுஜன் சமாஜ் 4
மற்றவை 3
சத்தீஸ்கர்
மொத்தம் 90
பாஜக 49
காங்கிரஸ் 39
பகுஜன் சமாஜ் 1
மற்றவை 1
புது தில்லி
மொத்தம் 70
பாஜக 31
ஆம்ஆத்மி 28
காங்கிரஸ் 8
மற்றவை 3
No comments:
Post a Comment