லேகா வாஷிங்கடனுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் மும்முரமாக பெண் பார்க்கின்றனர். இண்டர்நெட்டில் தேடிப் பார்த்து கம்யூட்டர் என்ஜினியரான பிரசன்னாவை மாப்பிள்ளையாக தேர்வு செய்கின்றனர்.
பெண் வீட்டிற்கு பிரசன்னா சென்று பெண் பார்க்கும் படலமும் நடக்கிறது. பெண்ணுடன் தனிமையில் பேச விரும்பும் பிரசன்னா, அவரை காபி ஷாப்புக்கு அழைத்துப்போய் அவரைப் பற்றி தான் சேகரித்த விஷயங்களை அவரிடம் விவரிக்கிறார். தனக்கு அவள் பிடித்துப்போக காரணமாக விஷயத்தையும் அவளிடம் கூறுகிறார்.
இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப்போக நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமண தேதி நிச்சயிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் லேகாவின் பிறந்த நாள் பார்ட்டியை கொண்டாடிவிட்டு வீட்டில் தனிமையில் இருக்கும் பிரசன்னாவும் லேகாவும் தவறு செய்ய முற்படுகிறார்கள்.
அப்போது பிரசன்னாவால் இல்லற வாழ்க்கையில் சரிவர ஈடுபாடு காட்ட முடியவில்லை. இதனால் மனமுடையும் பிரசன்னாவை லேகா சமாதானப்படுத்தி டாக்டரிடம் சென்று காண்பித்து, இதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு ஆறுதல் கூறுகிறார்.
பிரசன்னா ஒவ்வொரு டாக்டராக சென்று இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்கிறார். இதற்குள் திருமண தேதியும் நெருங்குகிறது. அப்போது பிரசன்னாவின் குடும்பத்தினருக்கு லேகா மீது சிறிது காழ்ப்புணர்ச்சி ஏற்பட, அது பிரசன்னாவுக்கும் லேகாவுக்குமிடையே பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு திருமணம் தடைபடும் நிலைமைக்கு சென்றுவிடுகிறது.
இதிலிருந்து பிரசன்னா மீண்டு லேகாவை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
பிரசன்னா மாப்பிள்ளை வேடத்திற்கு கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார். பிரசன்னாவுக்கு நல்ல தீனி போடும் கதாபாத்திரம் என்பதால் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.
தன்னுடைய பிரச்சினைக்காக வைத்தியரைத் தேடி அலையும்போது சிரிப்பை வரவழைத்திருக்கிறார். லேகாவிடம் தன் அன்பான காதலை வெளிப்படுத்தும்போதும் தெளிவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
லேகா வாஷிங்டன் மணப்பெண் வேடத்தில் அழகாக இருக்கிறார். நடிப்பும் பரவாயில்லை. பிரசன்னாவிடம் கோபப்படும் வேளையில் துள்ளி குதித்திருக்கிறார். இவருடைய அப்பாவாக வரும் டெல்லி கணேஷ் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் காத்தாடி ராமமூர்த்தி, லேகாவின் அம்மாவாக உமா ஐயர், டாக்டராக வரும் கிரேஸி மோகன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
நூல் விலகினாலும் கதையே மாறிப்போகும் பிரச்சினையை கையில் எடுத்து, அதை கம்பி மேல் நடப்பதுபோன்று நகர்த்தி கொண்டு போயிருக்கும் இயக்குனர் ஆர்.எஸ்.பிரசன்னாவை பாராட்டலாம். நிச்சதார்த்த காட்சிகளை எதார்த்தமாக ஒளிப்பதிவு செய்த விதம் அருமை. அரோரா இசையில் ஒரு சில பாடல்களை தவிர மற்ற பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செய்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘கல்யாண சமையல் சாதம்’ பரிமாறிய விதம் அருமை.
No comments:
Post a Comment