மதுரை மாநகரத்தில் இருந்து தகராறு ஆரம்பிக்கிறது. அருள்நிதி, பவன், குமார் மற்றும் முருகதாஸ் ஆகிய நால்வரும் நண்பர்கள். பீரோவைப் பயன்படுத்தி மிகவும் சாமர்த்தியமாக திருடுவதில் இவர்கள் கில்லாடிகள்.
பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களைப் பிடிக்க போலீஸ் முயற்சி செய்கிறது. இவர்களை பிடிப்பதற்கு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய இன்ஸ்பெக்டரின் வீட்டைத் தெரிந்துக் கொண்டு திருட்டு நண்பர்கள், அவரது வீட்டிலேயே கொள்ளையடிக்கிறார்கள்.
பின்னர் இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்து விட்டு பக்கத்து ஊருக்கு செல்கிறார்கள். அங்கு லோக்கல் தாதா அருள்தாஸ் வீட்டில் திருடப்போய், அங்கே அவரிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அப்போது அருள்தாஸ் இவர்களிடம் ‘ஒரு வேலையை செய்யுங்கள், நான் பணம் தருகிறேன்’ என்று கூறி வளைத்துப் போடுகிறார்.
அதைக் கேட்டு இவர்களும் செய்கிறார்கள். அந்த வேலையை செய்து விட்டு அவரிடம் பணத்தகராறு ஏற்படுகிறது. அப்போது அவரையும் அடித்து உதைக்கும் திருட்டு நண்பர்கள், அங்கிருந்து வெளியேறி விடுகிறார்கள்.
இதற்கிடையில் ஒரு விபத்தில் பூர்ணாவை சந்திக்கிறார் அருள்நிதி. ‘காப்பாற்றுங்கள்’ என்று கத்தி கூச்சலிட்டு பொதுமக்களை அலர்ட் செய்துவிட்டு சென்று விடுகிறார் அருள்நிதி. அதன்பின் பூர்ணாவை சந்திக்கும் போது அவர் மீது காதல் வயப்படுகிறார். துரத்தித் துரத்தி காதலையும் வெளிப்படுத்துகிறார்.
ஒருகட்டத்தில், பூர்ணாவை கோவிலில் சந்தித்து தனது காதலை சொல்லும்போது, பூர்ணாவின் தந்தையிடம் வேலை செய்யும் அடியாட்கள் அருள்நிதியை அடித்து விடுகிறார்கள். இதைப்பார்த்து அவருடைய மற்ற நண்பர்கள் பூர்ணாவின் வீட்டில் புகுந்து அங்குள்ள ஆட்களை அடித்து தகராறு செய்து விடுகிறார்கள். பூர்ணாவின் தந்தை அந்த ஊரின் கந்து வட்டி ராஜேந்திரன் என்னும் ஜெயபிரகாஷ்.
திருட்டும் தகராறும் என்று இணைந்திருந்த நண்பர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்பமாக, அவர்களின் ஒருவனான குமார் கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலைக் கும்பலை பழிவாங்க மற்ற நண்பர்கள் தேடுகிறார்கள்.
இறுதியில் அவரை யார் கொன்றது? எதற்காக கொன்றார்கள்? இவர்கள் பழிவாங்கினார்களா? அல்லது இவர்கள் பழிவாங்கப்பட்டார்களா? என்று மீதிக்கதையை சஸ்பென்ஸ், திரில்லிங்காக நகர்த்தி சென்றிருக்கிறார்கள்.
வித்தியாசமான கதைக்களத்தில் இதுவரை நடித்திருந்த அருள்நிதி, இந்தப் படத்தில் காதல் காட்சிகளில் கலகலப்பாக நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் இன்னும் நன்றாக நடித்திருக்கலாம். பூர்ணாவின் முந்தைய படங்களைவிட இந்தப்படம் முக்கியமான படம் என்றே கூறலாம்.
ஒரு கந்துவட்டி அப்பாவின் மகளாக, காலேஜ் ஸ்டூடண்ட்டாக, பிடிவாதக்காரியாக, ஹீரோவின் காலைப்பிடித்து காதலுக்காக கெஞ்சுபவராக… என நடிக்க வாய்ப்பு கிடைத்து அதை வெளுத்து கட்டி கலக்கியிருக்கிறார். பாவாடை தாவணி, புடவையில் பூர்ணா அழகோ அழகு.
நண்பர்கள் கதை என்பதால் நான்கு பேருக்கும் சமமான ரோல்கள் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கணேஷ் விநாயக். நான்கு பேரும் அதை திறமையாக செய்திருக்கிறார்கள். முதல் பாதியில் இன்னும் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.
பின் பாதி மிகவும் அருமை. சண்டைக்காட்சிகள் முந்தைய படங்களை ஞாபகப்படுத்தினாலும் பார்க்க நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் படத்திற்கு கூடுதல் பலம். தரண் குமார் இசையில் திருட்டு பயபுள்ள… பாடல் முணுமுணுக்கும் ரகம். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார்கள்.
நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர், காதல் காட்சிகளிலும் கொஞ்சம் அக்கறை செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘தகராறு’ நண்பர்களுடன் பார்க்கலாம்.
No comments:
Post a Comment