நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் வரும் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்காது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்தார்.
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், தில்லியில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது:
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தில்லி ஆகிய மாநிலத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்காது. சட்டப்பேரவைத் தேர்தல்களில் அந்தந்த மாநில முதல்வர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் பெரும்பாலான மக்கள் வாக்களிக்கிறார்கள்.
மக்களவைத் தேர்தலில் இந்தியா யார் ஆள வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களிக்கிறார்கள். எனவே, மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்காது.
காங்கிரஸ் கட்சி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பரந்து விரிந்துள்ளது. ஆனால், தமிழகம், ஆந்திரம், மேற்குவங்கம், ஒடிசா போன்ற பல மாநிலங்களில் பாஜக என்ற கட்சியே கிடையாது.
நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் பாஜகவுடன் கூட்டணி அமைக்க நிதீஷ்குமார், நவீன் பட்நாயக், மம்தா பானர்ஜி, மாயாவதி போன்றவர்கள் முன்வர மாட்டார்கள். எனவே வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாது.
2014 தேர்தலிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்றார் ஞானதேசிகன்.
No comments:
Post a Comment