2.12.13
ரத்த அழுத்தத்திற்கு பன்னீர் ரோஜா
இன்றைய இளம் வயசுக்காரங்களுக்கு ஆபீசுல வேலைபளு, கடன் தொல்லை, குடும்ப சிக்கல்னு பிரச்னைகள்லேர்ந்து மீள முடியாம திண்டாடறப்ப ரத்த அழுத்த நோய் உடனே வந்து தொத்திக்கிடும். மயக்கமும், தலை சுத்தலும் வந்து எந்திரிக்க முடியாம இம்சைப்படுத்தும். இதுக்கும் நாட்டு வைத்தியத்துல ஏகப்பட்ட மருந்துகள் இருக்கு… சொல்றேன் கேட்டுக்கிடுங்க!
ரத்த அழுத்தம் சீரடைய…
பன்னீர் ரோஜா பூ தெரியும்தானே..! அதுல நாலு பூவோட இதழ்களை மட்டும் தனியா எடுத்து, ஒரு டம்ளர் தண்ணி விட்டு நல்லா காய்ச்சணும். அரை டம்ளரா சுண்டினதும் இறக்கி வெச்சிரணும். காலையில வெறும் வயித்துல அதைக் குடிச்சிட்டு வந்தா… ரத்த அழுத்தம் சரியா போயிரும்.
இதே நோய்க்கு கைவசம் இன்னொரு வைத்தியமும் இருக்கு. அரை டம்ளர் வாழைத்தண்டு சாறு, அரை டம்ளர் மோர் ரெண்டையும் கலந்துக்கிடணும். இதை 10 முதல் 15 நாட்களுக்கு தொடர்ந்து குடிச்சிட்டு வந்தோம்னா ரத்த அழுத்தம் குணமாயிரும்.
திரிபலா (நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய்) 50 கிராம், திரிகடுகம் (சுக்கு, மிளகு, திப்பிலி) 50 கிராம், அதோட 100 கிராம் நாட்டு சர்க்கரை சேர்த்துக்கணும். இதை காலையிலயும் – சாயங்காலமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு வெறும் வயித்துல ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தா ரத்த அழுத்தம் சரியாயிரும். தேவைப்பட்டா சில நாள் இடைவெளி விட்டு திரும்பவும் சாப்பிடலாம்.
ரத்த அழுத்தத்தால வரும் மயக்கம் சரியாக…
சிலருக்கு ரத்த அழுத்தத்துனால தலை சுத்தல், மயக்கம்னு வந்து படுத்த படுக்கையாக்கிடும். அந்த நேரத்துல ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரையை ஒரு பாத்திரத்தில போட்டு வறுத்துக்கணும். தேன் பதத்தில் பாகுமாதிரி வந்ததும், 3 இன்ச் அளவுள்ள இஞ்சித்துண்டை நல்லா அரைச்சி வடிகட்டி, ஒரு டம்ளர் தண்ணிய சேர்க்கணும். இதுகூட 25 கிராம் காஞ்ச திராட்சையைப் போட்டு கொதிக்க வைக்கணும். இது அரை டம்ளரானதும் இறக்கி வெச்சி ஆறினதும் பழத்தை சாப்பிட்டு தண்ணியையும் குடிக்கணும். காலைல, சாயந்தரம்னு மூணு நாள் தொடர்ந்து குடிச்சிட்டு வந்தா மயக்கம் தெளிஞ்சி, ரத்த அழுத்தமும் குணமாயிரும்.
வயிறு குறைய.. ஆயுர்வேத மருந்து
சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பகுதியில் அசைந்து வேலை செய்து கொண்டிருக்கும் ஸமான-அபான வாயுக்களின்சீற்றத்தினால் நீங்கள் துன்பப்படுகிறீர்களா? அல்லது வயிற்றின் தசைப் பகுதிகள் பெருத்திருக்கின்றனவா? போன்ற சந்தேகங்கள் எழுகின்றன. எதுவாக இருந்தாலும் நீங்கள் கொள்ளு மாவை, புளித்த மோருடன் கலந்து சூடாக்கி, காலையில் குளிப்பதற்கு முன்பாக, சுமார் 15 – 20 நிமிடங்கள் கீழிருந்து மேலாகவும், வயிற்றின் வலப்புற அடிப்பகுதியிலிருந்து மேலாகவும், தொப்புளுக்கு மேலாகவும், இடப்புறம் மேலிருந்து கீழாகவும் சூடு பறக்கத் தேய்த்து ஊற வைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும். தேய்த்துக் கொள்ளும்போது வயிறு காலியாக இருக்க வேண்டும். இதனால் ஏற்படும் இரு பெரும் நன்மைகள், வயிற்றின் தோல் பகுதியின் அடியிலுள்ள கொழுப்பும், தேவையற்ற சதையும் குறையும். இரண்டாவது, வாயுவின் சீற்றம் குறைந்து தசைகள்வலுப்பெறும்.
இட்லியும் ரசமும் சாப்பிடுவதால் உங்கள் தொப்பை குறைந்து விட்டது என்பது சற்று ஆச்சரியமான விஷயந்தான். ஏனென்றால் ஆயுர்வேதத்தில் அப்படி ஒரு குறிப்பு எங்கும் காணப்படவில்லை. உங்களுடைய உடற்கூறு வேண்டுமானால் அப்படி ஒரு விசேஷ அமைப்பைப் பெற்றிருக்கலாம். பொதுவாகவே காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை கொண்ட உணவு வகைகளால் மட்டுமே ஊளைச் சதையைக் கரைக்க இயலும் என்றும் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகளால் உடல் தாட்டியாவதாகவும் ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. இட்லி, ரசம் போன்றவை இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை கொண்டவை. அதனால்தான் குழப்பம்.
நீங்கள் ஒரு ஸ்பூன் தேனை அரை கிளாஸ் சாதாரண அதாவது சூடு இல்லாத தண்ணீரில் கரைத்து காலை இரவு உணவிற்குப் பிறகு சாப்பிட, வயிறு குறைந்து விடும். பகல் தூக்கம் தவிர்க்கவும்.
சில உடற்பயிற்சிகள் உங்களுக்கு உதவிடலாம். பச்சிமோத்தாஸனம் எனும் பயிற்சி இது. கீழே உட்கார்ந்து கொண்டு கால்களை நீட்டிக் கொள்ளவும். பிறகு ஆள்காட்டி விரலினால் கால்கட்டை விரல்களைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு சிறிது சிறிதாகத் தலையை முழங்கால்களின் நடுவே வரும் வரையில் முயற்சி செய்ய வேண்டும். முழங்கால்களை மேலே தூக்கக் கூடாது. இந்நிலையில் 2-3 நிமிடங்கள் இருக்கலாம். இதை 5-6 தடவைகள் செய்யலாம். இதைச் செய்வதால் தொடையிலிருக்கும்தசைகள் வலிவடைகின்றன. இடுப்புக்கு மேலிருக்கும் தசைகளும் வலிவடைகின்றன. முதுகெலும்பு வளைக்கப்படுவதால் அது தளர்ந்து கெட்டியாகாமலிருக்கிறது.
வயிற்றிலிருக்கின்ற கல்லீரல், மண்ணீரல் முதலிய உறுப்புகள் சுத்தப்படுத்தப்பட்டு நன்றாக வேலை செய்கின்றன. வயிற்றின் மேல்புற- கீழ்ப்புறத்திலிருக்கின்ற கொழுப்பு கரைந்து வயிறு குறைந்துவிடுகிறது. இதில் நிமிரும் நிலையில் மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். குனிகின்ற நிலையில் மூச்சை வெளியே விட வேண்டும்.
யோகமுத்ரா- பத்மாசனத்திலிருந்து கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு, மெதுவாகத் தலையைக் கீழே கொண்டு வந்து நெற்றியைப் பூமியில் பதிய வைக்க வேண்டும். 1- 2 நிமிடங்கள் வைத்திருந்து நிமிரவும். 5-6 தடவைகள் செய்யலாம். கழுத்து – முதுகுப் பகுதியிலுள்ள தசை நார்கள் வலுவடையும். அடி வயிற்றுக் கொழுப்புக் கரையும். சிறுநீர்ப்பையும் அதைச் சுற்றியுள்ள கிரந்திகளும் வலிவடைகின்றன.
வாயுவையும் அடிவயிற்றுச் சதையையும் கரைக்க ஆயுர்வேத மருந்தாகிய வரணாதி கஷாயத்தைக் காலை மாலை வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் தேன் கலந்து சுமார் 48 நாட்கள் சாப்பிடவும்.
இரத்த சோகை வராமல் தடுக்கும் கேழ்வரகு
கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்துகள் அதிகம் உள்ளது. பாலில் உள்ள கால்சியத்தை விட கேழ்வரகில் அதிக கால்சியத்தை கொண்டுள்ளது. கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும். நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. உடல் சூட்டை தனிக்கும். குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம். இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும். மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர மாதவிடாய் பிரச்சனைகள் தீரும். அதிக எடை இருப்பவர்கள் எடையை குறைக்க விரும்பினால் கேழ்வரகு சாப்பிடலாம். இது உடல் எடையை குறைக்கும். கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டாக, செய்து சாப்பிடலாம் . கூழ் அல்லது கஞ்சியாக சாப்பிடக்கூடாது. இதை கூழாக செய்து குடித்தால் கொலஸ்டிரால் குறையும்.
இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்பு சத்து உள்ளன. கர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேரத்து கொள்ளலாம். குடலுக்கு வலிமை அளிக்கும். உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன. கேழ்வரகு குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.
வித்யாபாலனை விட நயன்தாரா அதில் பெஸ்ட்!
கர்ப்பிணி வேடத்தில் நடிக்கும் நயன்தாரா இந்தி நடிகை வித்யாபாலனை மிஞ்சுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தியில் வித்யாபாலன் கர்ப்பிணியாக நடித்த ‘கஹானி’ படம் தமிழ், தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரில் ‘ரீமேக்’ ஆகி வருகிறது. இந்தியில் இப்படம் பலத்த வரவேற்பைப் பெற்றது. வசூலையும் வாரிக் குவித்தது.
வித்யாபாலனுக்கு விருதுகளையும் பெற்றுத் தந்தது. அனாமிகாவில் நயன்தாராவின் நடிப்பு எப்படி இருக்கும் என்று தமிழ், தெலுங்குத் திரையுலகினர் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர்.
நயன்தாரா ஏற்கெனவே ‘ ராம ராஜ்ஜியம்’ படத்தில் சீதை வேடத்தில் நடித்து வரவேற்பு பெற்றார். எனவேதான் ‘அனாமிகா’ படத்துக்கு அவரை தேர்வு செய்தனர். இதில் நயன்தாராவின் நடிப்பு வித்யாபாலனைவிட சிறப்பாக இருந்தது என்று படக்குழுவினர் பாராட்டு கிறார்கள்.
குதிரை, ரஸ்யா, ஸ்கூட்டி ஹீரோயின இருந்த மட்டும்தான் முடியும் – கஜால்
எம்.பி.ஏ., பட்டதாரியான காஜல், சினிமாவுக்கு வருவதற்கு முன் விளம்பரத் துறையில் வேலை பார்த்திருக்கிறார். இப்போதும் வர்த்தக ஆர்வம் உள்ள காஜல், எதிர்காலத்தில் ‘ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்’ போல ஏதேனும் வர்த்தகம் சார்ந்த கல்வி நிறுவனம் ஆரம்பிக்கும் யோசனையில் இருக்கிறார்.
‘மஹதீரா’ படத்துக்காக குதிரை சவாரி பயிற்சி பெற்றார். ‘மாற்றான்’ படத்துக்காக ரஷ்ய மொழி கற்றுக் கொண்டார். ‘துப்பாக்கி’ படத்துக்காக ‘ஸ்கூட்டி’ ஓட்டக் கற்றுக்கொண்டார். “ஹீரோயினாக இருப்பதால் கிடைக்கிற போனஸ் இது!” என்று கூறி அழகான கண்கள் சிமிட்டுகிறார்.
வெள்ளை நிறம்தான் காஜலின் விருப்பம். விழாக்கள் என்றால் வெள்ளுடை தேவதையாகத்தான் வருவார். ‘மஹதீரா’, ‘ஸ்பெஷல் 26’, ‘துப்பாக்கி’, ‘சிங்கம்’ (இந்தி) ஆகிய படங்களே தான் நடித்ததில் காஜ லுக்குப் பிடித்த படங்களாம். காஜலின் மிக நெருங் கிய தோழி, சமந்தா. ‘சாம்’ என்று செல்லமாக அழைத்து அடிக்கடி அவருடன் ‘சாட்’ செய்வார்.
சமந்தாவுக்கு ஏற்பட்டுள்ள தோல் நோய்! – படப்பிடிப்பு ரத்து
நடிகை சமந்தாவுக்கு மீண்டும் தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டது. அவருடைய முகம் முழுவதும் சிவப்பு புள்ளிகள் தோன்றியதால், சூர்யாவுடன் அவர் நடித்துக்கொண்டிருந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகை சமந்தா கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திடீர் என்று தோல் நோயினால் பாதிக்கப்பட்டார்.
அவருடைய முகத்திலும், உடம்பிலும் சிவப்பு புள்ளிகள் தோன்றியதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் அவர் மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். தோல் நோய் பாதிப்பு காரணமாக சமந்தா அந்த பட வாய்ப்பை இழந்தார். அவருக்கு பதில் நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நடித்தார்.
இதேபோல் ஷங்கரின் ‘நண்பன்’ படத்துக்கும் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். தோல் நோய் பாதிப்பு காரணமாக அந்த படத்திலும் அவரால் நடிக்க முடியாமல் போனது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபின், சமந்தா குணம் அடைந்தார். மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். லிங்குசாமி டைரக்டு செய்ய, அவருடைய தம்பி சுபாஷ்சந்திரபோஸ் தயாரிக்கும் புதிய படத்தில், சூர்யா ஜோடியாக நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில், 10 நாட்கள் நடந்தது. சூர்யா–சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த நிலையில், சமந்தாவுக்கு மீண்டும் தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டது. அவருடைய முகம் முழுவதும் சிவப்பு புள்ளிகள் தோன்றின. உடம்பிலும் அதுபோல் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டன.
இதனால் அவர் தொடர்ந்து நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சூர்யா, லிங்குசாமி, மற்றும் படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பினார்கள். சமந்தா இல்லாத காட்சிகளை டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
சமந்தாவுக்கு தோல் நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக சக்தி வாய்ந்த விளக்கு வெளிச்சம்தான் காரணம் என்று அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தெரிவித்தார்கள்.
கணவருக்கு இதய வடிவான தீவை பரிசளிக்க போகும் ஏஞ்சலினா ஜோலி
இந்திய நடிகர்கள் பண்ணை வீடு வைத்திருப்பது போல் ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு தனித் தீவுகள். விடுமுறையில் தங்களின் சொந்த தீவில் தனிமையில் இனிமை காணும் ஹாலிவுட் பிரபலங்கள் நிறைய.
ஏஞ்சலினா ஜோலி 12 மில்லியன் டொலர்களுக்கு இதய வடிவ தீவு ஒன்றை வாங்கியிருப்பதாக செய்திகள் பரபரக்கின்றன. டிசம்பர் 18 ஜோலியின் கணவரும், நடிகருமான பிராட் பிட்டின் 50 வது பிறந்தநாள்.
அவருக்கு பரிசளிக்க இந்தத் தீவை ஜோலி வாங்கியிருக்கிறார். ஆளில்லாத இந்தத் தீவில் ஜோலிக்குப் பிடித்த மாதிரி இரண்டு வீடுகளும் உள்ளனவாம்.
ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக ஹெலிபேடும் இங்குண்டு. நியூயார்க்கிலிருந்து 50 மைல் தொலைவில் உள்ளதால் நினைத்த நேரம் ஹெலிகாப்டரில் ஏறி தீவுக்கு சென்றுவிடலாம்.
இதய வடிவில் இருந்ததால் தான் ஜோலிக்கு இந்தத் தீவு பிடித்துப் போனதாகவும் சொல்கிறார்கள். இதயத்துக்கு பக்கத்தில் இருப்பவர் தானே புருஷனும்.
செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை துவக்கியது விண்ணில் ஏவப்பட்ட, ‘மங்கல்யான்’
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் விண்ணில் ஏவப்பட்ட, ‘மங்கல்யான்’ செயற்கைக்கோள் இன்று புவி வட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு, செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை துவக்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் என்ற அதிநவீன விண்கலத்தை பி.எஸ்.எல்.வி. சி25 ராக்கெட் மூலம் கடந்த 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பூமியை அதன் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த, ‘மங்கல்யான்’ செயற்கைக்கோள் நவம்பர் 16ம் தேதி, பூமியில் இருந்து, 1,92,874 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.
இன்று அதிகாலை, 12:30 மணிக்கு ‘மங்கல்யான்’ செயற்கைக்கோள் செவ்வாய் கிரக பாதையை நோக்கி திருப்பப்ட்டது. தொடந்து 12.49 மணிக்கு மங்கல்யான் செயற்கைக்கோளை செவ்வாய் நோக்கி அனுப்பும் பணி துவங்கி வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு செவ்வாய் கிரகம் நோக்கி தனது 68 கோடி கி.மீ பயணத்தை துவக்கியது.
நொடிக்கு 647.96 மைல் வேகத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணிக்கும் மங்கல்யான், விண்வெளியில் பயணித்து 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை அடையும். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட சில நாடுகளால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட செவ்வாய் கிரக சாதனையை தற்போது இந்தியாவும் சாதித்துள்ளது.
குரூப் 2 தேர்வு முடிவுகள் மூன்று மாதங்களில் வெளியாகும்: தேர்வாணையம்
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் மூன்று மாதங்களில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.மேலும், தேர்வர்கள் தாங்கள் எழுதிய விடைகளுடன் சரியான விடைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் ஒரு வாரத்தில் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தேர்வாணையம் கூறியுள்ளது.
திருமணம் செய்து கொள்ளாமல் ஆணுடன் வாழும் பெண்களுக்கு பாதுகாப்பு – உச்ச நீதிமன்றம் உத்தரவு
திருமணம் செய்து கொள்ளாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்களுக்கும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் தம்பதிகளாக சேர்ந்து வாழும் நடைமுறை நாட்டில் இப்போது அதிகமாகி உள்ளது. சில ஆண்டுகளில் இவர்களில் பெரும்பாலோர் பிரிந்து விடுகின்றனர் அல்லது இறுதி வரை சேர்ந்து வாழ்கின்றனர். இதுபோன்ற பெண்களுக்கும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் சட்ட பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து நேற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது: திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ கிடையாது. துரதிருஷ்டவசமாக, இதுபோன்ற உறவு முறை சட்டத்தால் அங்கீகரிக்கப்படாமல் இருப்பதாலும், இயற்கை திருமணத்துக்கு முரணாக இருப்பதாலும், இந்த உறவுமுறை பிரிவுக்குப் பிறகு பெண்களுக்கு சட்ட பாதுகாப்பு இல்லாமல் உள்ளன.
எனவே, இதுபோன்ற பெண்களுக்கும், இந்த உறவின் மூலம் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் சட்டப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். மேலும், இந்த உறவுமுறையையும் ‘இயற்கை திருமண உறவுமுறை’க்குள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
நடிகைக்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்பிய இந்திய ஜனாதிபதி!
இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் எம்.பியாக உள்ள நடிகை குத்து ரம்யாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். குத்து ரம்யா என்ற பெயரில் திரையுலகில் அறிமுகமான கன்னட நடிகை திவ்யா ஸ்பந்தனா, தமிழில் குத்து, பொல்லாதவன் மற்றும் வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இன்று தனது 31வது பிறந்த நாளை கொண்டாடிய ரம்யாவுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியிடம் இருந்து வந்துள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியினை இணையதளத்தில் வெளியிட்டுள்ள ரம்யா, அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து விடயங்களிலும் உங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் அன்பும், ஆதரவுமே என்னைச் செயல்படத் தூண்டுகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்தியக் கடற்படைத் தளபதி இலங்கை பயணமும், கோத்தபய ராஜபக்சேயின் இந்தியப் பயணமும், மத்திய அரசின் ரகசிய சதி வேலை – வை
இலங்கைத் தீவில் சிங்கள இனவாத ராஜபக்சே அரசு, ஈழத் தமிழ் இனப்படுகொலையை நடத்த இந்தியாவின் மத்திய காங்கிரஸ் அரசுதான் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயுதங்கள் தந்தும், இந்தியாவின் முப்படைத் தளபதிகள் மூலம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இயக்கியும், மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்தது.
2007 ஆம் ஆண்டில், இந்திய-இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கைக்கு தகவல்கள் தந்தும், புலிகளுக்கு வந்த 14 கப்பல்களைக் கடலில் மூழ்கடிக்கச் செய்தும், அப்போரில் உதவியது. அதனால்தான், யுத்தத்தில் தாங்கள் வெல்ல முடிந்தது என்றும், இப்போரை இயக்கியதே இந்தியாதான் என்றும் அதிபர் ராஜபக்சேவும், இலங்கை அமைச்சர்களும் கூறினர்.
இந்த வாரத்தில், இந்தியக் கடற்படைத் தளபதி டி.கே.ஜோஷி இலங்கைக்கு ஐந்து நாள் பயணமாகச் சென்று, அந்நாட்டின் தலைமைத் தளபதி ஜெகத் ஜெகசூரியாவையும், கடற்படைத் தளபதி ஜெயநாத் கோலம்பேஜ் இருவரையும் சந்தித்தார். இருநாட்டு கடற்படைத் தளபதிகள் கூட்டாக நிருபர்களிடம் கூறுகையில், இருநாட்டு கடற்படையும் அனைத்து பிரச்சினைகளிலும் இணைந்தே சிறப்பாகச் செயல்படுகிறது என்றும், கடலில் மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட அனைத்தையும் திறமையாகக் கையாள்வதாகவும் தெரிவித்தனர்.
அப்படியானால், தாய்த் தமிழகத்து மீனவர்கள் 578 பேர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதற்கு இந்தியக் கடற்படையும் கூட்டுக் குற்றவாளி என்பது நிரூபணமாகிறது.
இந்தியாவில் நான்கு ஆண்டு கால கடல்சார் பயிற்சிப் படிப்புக்கு, இலங்கை கடற்படையினருக்கு மட்டும்தான் மற்ற நாடுகளைவிட முன்னுரிமை கொடுக்கப்படும் என்று இந்தியத் தளபதி ஜோஷி கூறியுள்ளார்.
இதற்கு இடையில், இந்த வாரம் வியாழன், வெள்ளி இரு நாட்களிலும் அதிபர் ராஜபக்சேவினுடைய சகோதரன் கோத்தபய ராஜபக்சே இரகசியமாக டெல்லிக்கு வந்து, இந்திய வெளிவிவகாரத்துறை அமைமச்சர் சல்மான் குர்ஷித்தையும், அவரது துறையின் உயர் அதிகாரிகளையும், இராணுவ அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசி, பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த வருகையை பத்திரிகையாளர்களுக்குக்கூட தெரிவிக்காமல், மத்திய அரசு பரம இரகசியமாக மூடி மறைத்த மர்மம் என்ன?
ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் மன்னிக்க முடியாத துரோகத்தைத் தொடர்ந்து செய்து வருகிற இந்திய அரசு, சிங்களவர்களின் பலி பீடத்தில் தமிழ் இனத்தின் உயிர்களைக் காவு கொடுக்கும் கொடிய வஞ்சகத்தை மூடி மறைக்க முடியாது.
வேதனையால் வெந்துபோன தமிழர் இதயத்தில் சூட்டுக்கோலைத் திணிக்கும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு தக்கபாடத்தைத் தமிழ்ச் சமூகமும், வரலாறும் நிச்சயமாகக் கற்பிக்கும் என எச்சரிக்கிறேன்.
காவல்த்துறை கண்காணித்த பெண்ணை சந்தித்த மோடியால் சர்ச்சை!
குஜராத்தில் அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின்படி கண்காணிக்கப்பட்டதாக கூறப்படும் இளம்பெண், முதல்வர் மோடியை சந்தித்த படங்கள் இணையதளத்தில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் முதல்வர் மோடிக்கு நெருக்கமான அமைச்சர் அமித் ஷா. இவர் பொலிஸ் அதிகாரி ஜிங்காலை தொடர்பு கொண்டு இளம்பெண் ஒருவரின் நடவடிக்கைகளை கண்காணிக்க உத்தரவிட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக அமைச்சரும், அதிகாரியும் பேசிய தொலைபேசி உரையாடல்களும் வெளியானது.
இந்நிலையில் காவல்த்துறை அதிகாரி சிங்கால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கட்ச் நகரில் நடந்த விழாவின் போது முதல்வர் மோடியை சர்ச்சைக்குரிய அந்த பெண் சந்தித்து பேசுவது போன்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளன. பெண்ணின் பெயர் மாதுரி என்று குறிப்பிடப்பட்டு, முகம் மறைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த புகைப்படங்களில் ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சர்மாவும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதீப் சர்மா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மலைத்தோட்ட திட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியராக இருந்த போது மோடியை அந்த பெண் சந்திக்க ஏற்பாடு செய்ததாக கூறியுள்ளார்.
அதன்பிறகு அந்த பெண்ணுடன் மோடி இமெயில் தகவல்களை தொடர்ந்து பரிமாறி வந்ததாகவும் அதில் தெரிவித்துள்ளார்.அந்த பெண்ணை காவல்த்துறை கண்காணித்தது தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கடந்த வாரம் பிரதீப் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் மோடி மற்றும் மாதுரி சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியானதால் குஜராத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாததற்கு பா.ஜனதா தான் காரணம் என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
‘‘இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும்’’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை மைலாப்பூரில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு வந்தவர்களை கே.எஸ்.அழகிரி எம்.பி. வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்துகொண்டு, ‘இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும்’ என்ற தலைப்பில் பேசினார்.
நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி எம்.பி., புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சேவாதள மாநில தலைவர் கோவை செல்வராஜ், முன்னாள் எம்.பி. வள்ளல்பெருமான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எச்.வசந்தகுமார், செல்வபெருந்தகை, முன்னாள் மேயர் தியாகு சுஜாதா, முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், சிறுபான்மை பிரிவு மாநில துணை தலைவர் ஹசினா சயத், வடசென்னை காங்கிரஸ் பிரமுகர் வி.எஸ்.ஜே.தினகரன், இதயத்துல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கத்தில், மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:–
இலங்கை தமிழர்கள் பிரச்சினையை மற்றவர்கள் போல் நமக்கு பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சி பொது மேடை அமைத்துக்கொள்வது கிடையாது. அதனால், நமது கருத்து வெளியே தெரிவதில்லை. அதற்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த கூட்ட அமைப்பாளரும் நான்தான், அழைப்பாளரும் நான்தான், பேச்சாளரும் நான்தான்.யாருக்கு எதிராகவோ பேச இந்த கூட்டம் அமைக்கப்படவில்லை.
இலங்கையில் வாழும் தமிழர்களின் நல்வாழ்வுக்காக முதலாவதாக ஒப்பந்தம் போட்டவர் ராஜீவ்காந்தி. அந்த உடன்பாட்டை முறிக்க யார் காரணம். அதன் விளைவு உள்நாட்டிலேயே போர் ஏற்பட்டது. பலர் இறந்தனர். அந்த வரலாறு மனவருத்தம் தரும் வரலாறு. அந்த ஒப்பந்தம் நிறைவேறியிருந்தால், அங்கு தமிழரின் ஆட்சி நடந்து கொண்டிருக்கும். உறவு பலப்பட்டிருக்கும். அந்த 15 ஆண்டு கால சோகம் நடந்திருக்காது.
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது, இன்னொரு நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்தி அங்கு நடந்த உள்நாட்டு போரை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அது வெற்றி பெறவில்லை. அந்த போரில் அப்பாவி மக்கள், ராணுவத்தினர், விடுதலைப்புலிகள் என 65 ஆயிரம் பேர் இறந்தனர்.இந்த பிரச்சினையை மூன்றாக வகைப்படுத்தலாம். ஒன்று இலங்கை தமிழர்களுக்கு வாழ்வாதாரம், சம உரிமை, சம அந்தஸ்து கிடைக்க செய்வது ஆகும்.
அடுத்து, அங்கு நடந்த இனப்படுகொலை குறித்து ஆழமான, நேர்மையான விசாரணை நடத்தி, அதில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும். மூன்றாவதாக, அங்கு புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு, வீடு இழந்தவர்களுக்கு மீண்டும் பழைய இடத்திலேயே வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதுதான்.
இந்திய அரசு இதில் என்ன செய்ய இருக்கிறது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். தமிழர்கள் இந்த விஷயத்தில் பொறுமையாக அணுக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை சிந்தனையாளர்களின் மன்றமாக கருதுகிறேன்.இந்த உலகத்தில் இலங்கையைப்போல் 190 நாடுகள் உள்ளன. இலங்கை இறையாண்மை பெற்ற நாடு. ஒரு அரசு, பாராளுமன்றம் உள்ளது. தேர்தல்களும் நடக்கிறது. தமிழர்கள் அங்கு மொழி சிறுபான்மை மக்களாக வாழ்கிறார்கள். அவர்களின் உணர்வுகளை அவர்களால்தான் புரிந்துகொள்ள முடியும்.
இந்தியாவிலும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மை மக்கள் இருக்கிறார்கள். ஒரு இறையாண்மை உள்ள நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகளை பெற்றுத்தருவது எளிதல்ல. இந்தியாவிலும் பலர் தனிநாடு கேட்கிறார்கள். அப்படி தனிநாடு கோரிக்கையை நாம் சரி என்றா கேட்கிறோம். இந்த விஷயத்தை உணர்ச்சி பூர்வமாக எடுக்க முடியாது. அறிவுப்பூர்வமாக எடுக்க வேண்டும்.அதற்காகத்தான், இந்தியா – இலங்கை ஒப்பந்தம், இலங்கை அரசியல் சாசனத்தில் 13–வது திருத்தம் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 13–வது அரசியல் சட்டத்திருத்தத்தின்படி, சிங்களம் போல் தமிழையும் அரசு மொழியாக்க வேண்டும். வடக்கு – கிழக்கு மாகாணத்தை இணைத்து புதிய மாகாணத்தை உருவாக்க வேண்டும். ஆனால், இந்த வாக்குறுதிகளை இலங்கை மீறிவிட்டது.
இலங்கையில் உள்ள உச்சநீதிமன்றம் 2006–ம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கு – கிழக்கு மாகாணம் இணைப்பு செல்லாது என்று தீர்ப்பளித்தது. தற்போது, 13–வது அரசியல் சட்டத்திருத்தத்தை மீண்டும் சீர்குலைக்க முயற்சி நடந்து வருகிறது. ஒரு இறையாண்மை நாட்டிற்கும், அண்டை நாட்டுக்கும் இடையே விவாத பொருளாக 13–வது அரசியல் சட்டத்திருத்தம் அமைந்துள்ளது. முரட்டுத்தனமாக இந்த பிரச்சினையை எதிர்கொண்டால் எப்படி தீர்வு கிடைக்கும்.தொடர்ந்து, சாதுர்யமாக, ராஜதந்திரமாக 13–வது அரசியல் திருத்தத்தை செயல்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கு தமிழர்கள் ஆதரவளிக்க வேண்டும். 13–வது அரசியல் சட்டத்திருத்தம் உறுதியாக நிறைவேற்றப்படும்.
இந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில், தி.மு.க. – காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு. தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தபோது, அதில் 2 திருத்தங்களை செய்ய வேண்டும் என்றார். நாங்கள் டெல்லி செல்வதற்குள் என்ன நடந்தது என்று உங்களுக்கே தெரியும்.இலங்கை அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர, தீர்மானம் தயாரிக்கப்பட்டது.
அதை பா.ஜனதாவிடம் எடுத்து சென்றபோது அக்கட்சியின் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆதரிக்கவில்லை. சரி, தீர்மானமாவது வேண்டுமா?, வேண்டாமா? என்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டலாம் என்று முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, அதற்கும் பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது. பாராளுமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவராததற்கு பா.ஜனதா தான் காரணம். அவர்கள் எப்படி தேர்தலில் ஜெயித்து ஆட்சி அமைத்து, இலங்கை தமிழர்களுக்கு நம்மை செய்வார்கள்?.
இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்துகொள்ளாதது சரியான முடிவு. அவர் அங்கு செல்லக்கூடாது என்று நானே வலியுறுத்தியுள்ளேன். ஆனால், அந்த மாநாட்டை புறக்கணிக்க கூடாது என்பது நமது நிலை அல்ல. மாநாட்டை புறக்கணித்தால் பிற பிரச்சினைகள் பற்றி நம்மால் பேச முடியாது.காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத்துறை மந்திரி கலந்துகொண்டது, இந்தியா எடுத்த விவேகமான முடிவாகும்.
அங்குள்ள தமிழர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு எடுத்த முடிவு. ஒரு கட்டத்தில் ராஜபக்சேவே தனது நிலையை மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அங்குள்ள வடக்கு மாகாண முதல்வர் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் அங்கு செல்வார்.இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்கும் வரை ஓயமாட்டோம். இலங்கை தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்படும்போது அங்குள்ள அனைவருக்கும் வீடு கிடைக்கும்.இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
மன்மோகன்சிங் விரைவில் யாழ் செல்வார்
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் யாழ்ப்பாணம் சென்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனையும் வடக்கில் பாதிக்கப்பட்ட தமிழர்களையும் நேரில் சந்திப்பார் என்று இந்திய மத்திய நிதியமைச்சர ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வடபகுதிக்கு வரவேண்டும் என முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரபல ஹாலிவுட் நடிகர் பால் வாக்கர் மரணம்!
ஹாலிவுட் சினிமாப்பட பிரபல நடிகர் பால் வாக்கர் (40). இவர் ’இல்லீகல் ஸ்டிரீட் ரேசிங்’, ’பாஸ்ட் அண்டு தி பியூரியஸ்’ உள்பட பல சண்டைப்படங்களில் நடித்திருக்கிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவர் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் நேற்று பிற்பகலில் ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது நண்பரின் காரில் சென்றார்.
அப்போது கார் எதிர்பாராமல் தறிகெட்டு ஓடி விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. அதில் நடிகர் பால் வாக்கர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தனர். பால் வாக்கர் 1973-ல் கலிபோர்னியாவில் பிறந்தார். 1985-ல் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆனார். பின்னர் 1986-ல் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இவர் நடித்த ’பாஸ்ட் அண்டு தி பியூரியஸ்’ படத்தின் மூலம் பிரபலமானார்.
கார் பந்தயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் 6 பகுதிகளாக வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது அதன் 7-வது பகுதியில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.
போலீஸ் தலைமையகம் எதிரே டாக்ஸி ஓட்டுநர் மீது துப்பாக்கி சூடு
தில்லி போலீஸ் தலைமையகம் எதிரில் டாக்ஸி ஓட்டுநர் மீது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தூப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார்.
தில்லி ஐடிஓ சந்திப்பு அருகே இந்திரபிரஸ்தா பகுதியில் தில்லி போலீஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இப் பகுதி வாகன நெரிசலுடன் எப்போதும் பரபரப்புடன் காணப்படுவது வழக்கம்.
இந் நிலையில், தில்லி போலீஸ் தலைமையகம் அருகே, தனது வாடகைக் காரை காஜியாபாத்தைச் சேர்ந்த டம்மி (28) ஓட்டி வந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் திடீரென டம்மியை நோக்கித் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த டம்மியை அருகே இருந்த காவலர்கள் போலீஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக தில்லி போஸீல் உயர் அதிகாரி கூறியது:
துப்பாக்கியால் சுடப்பட்ட டாக்ஸி ஓட்டுநரின் நிலைமை சீரடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக டம்மிக்கும், இரு டாக்ஸி ஓட்டுநர்களுக்கு இடையே கடந்த 22-ஆம் தேதி தகராறு ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. மேலும், அச் சம்பவம் தொடர்பாக இரண்டு டாக்ஸி ஓட்டுநர்கள் மீது கமலா மார்க்கெட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், முன்விரோதம் காரணமாக அந்த இருவரும் டம்மியை சுட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். தலைமறைவாகியுள்ள இருவரையும் தேடி வருகிறோம் என்றார்.
தமிழகத்தில் தேர்தல் கூட்டணிக்கு பா.ஜ.க அவசரப்படவில்லை: பொன்ராதாகிருஷ்ணன் பேட்டி
நரேந்திர மோடியை பிரதமராக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தாமரை பாதயாத்திரை நடத்துவதாக தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்திருந்தார். இதையடுத்து "வீடு தோறும் மோடி; உள்ளம் தோறும் தாமரை' என, பெயரிடப்பட்டுள்ள, அந்த பிரசார பாத யாத்திரை இன்று மதுரை அருகே உள்ள கருப்பாயூரணியில் இருந்து தொடங்கியது. அங்கு முனீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு யாத்திரையை தொடங்கிய பொன்.ராதாகிருஷ்ணனன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நரேந்திரமோடையை மக்கள் தங்கள் பிரதமர் வேட்பாளராகவே நினைக்கின்றனர். தமிழக மக்கள் அவரை பிரதமராகவே ஏற்றுக்கொண்டுவிட்டனர். தமிழகத்தில் வரும் 22ம்தேதிவரை நடைபெறும் இந்த "வீடு தோறும் மோடி; உள்ளம் தோறும் தாமரை' என்ற பாதயாத்திரை பிரச்சாரம் நடைபெற உள்ளது. இதில் 12,618 கிராம பஞ்சாயத்துக்களில், பா.ஜ.,வை சேர்ந்த தலைவர்கள், பாதயாத்திரையாக சென்று, வீடு வீடாக, மக்களை சந்திப்பர். பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை பற்றியும், அவரது நிர்வாக திறன், நேர்மை, அவரது ஆட்சிக் காலத்தில் குஜராத் மாநிலம் அடைந்துள்ள வளர்ச்சி ஆகியவற்றை, கிராம மக்களுக்கு புரியும் விதத்தில் எளிமையாக விளக்க, முடிவு செய்துள்ளனர். இதனால் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும்.
ஜாதி, மொழி, இனம், கடந்து மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். நாட்டு நலனையும் தமிழக மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு நடைபெறும் இந்த புனித யாத்திரையின் போது மக்களிடம் தேசத்தின் தற்போதைய நிலை, ஏன் பாரதிய ஜனதாகட்சியையும் மோடியையும் ஆதரிக்க வேண்டும். என்பது போன்ற விஷயங்களை நேரடியாக சொல்வதோடு, மக்களின் தற்போதைய நிலை, அவர்களின் அன்றாட வாழ்வியல் சிக்கல்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளை நேருக்கு நேர் சந்தித்து அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினா.
மேலும் மோடி பிரதமராக தமிழத்தில் அனைத்துக்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். தற்போது தமிழத்தில் கூட்டணி நாடி பா.ஜ.கவுடன் பிற கட்சிகள் பேசி வருகின்றனர். நாங்கள் தற்போது கூட்டணிக்கு அவரப்படவில்லை. வரும் ஜனவரி மாதம் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். அதன் பிறகு கூட்டணி பற்றி முடிவு செய்யப்படலாம்.என்று தெரிவித்தார்.
தற்போதைய மின்வெட்டுக்கு தி.மு.க காரணம் அல்ல: ஏற்காடு தொகுதி பிரச்சாரத்தில் ஸ்டாலின்
ஏற்காடு இடைத்தேரதல் இம்மாதம் 4ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தி.மு.க பொருளாளர் மு.க ஸ்டாலின் இன்று ஏற்காடு மலைக்கிராமங்களில் பிரசாரம் செய்தார்.
முன்னதாக இன்று காலை 10 மணிக்கு அவர் ஏற்காடு பஸ் நிலையத்தில் வேனில் நின்றவாற பேசினார். அப்போது அவர் ஏற்காடு பகுதியில்சில்வர் ஒக் மரங்களை வெட்ட அரசு தடை விதித்ததால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இங்கு குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை
ஏற்காடு தொகுதியில் உள்ள ரேசன் கடைகளில் 2 லிட்டர் மண்எண்ணை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய மின் வெட்டுக்கு தி.மு.க காரணம் அல்ல. இதற்கு அ.தி.மு.க அரசு தான் காரணம். மின் உற்பத்தியை பெருக்க எந்த நடவடிக்கையையும் அ.தி.மு.க. அரசு எடுக்க வில்லை. நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம். என்று தெரிவித்தார்.
இலங்கை பிரச்னையில் மக்களை திசைதிருப்ப காங்கிரஸ் நாடகம் நடத்துகிறது: இல. கணேசன்
தேர்தல் நெருங்குவதால் இலங்கைத் தமிழர் பிரச்னையில் மக்களை திசைதிருப்ப காங்கிரஸ் நாடகம் நடத்த தொடங்கியுள்ளது என்று பாஜகமூத்த தலைவர் இல. கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும் என்ற தலைப்பில் பேசிய ப. சிதம்பரம், இலங்கை அரசைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதை எதிர்த்த பாஜகவா இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை செய்யப் போகிறது என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தாம்பரத்தை அடுத்த மேடவாக்கத்தில் வீடுதோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரை என்ற பாஜக பாத யாத்திரையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இலங்கைத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் அரசின் தவறுகளை மறைப்பதற்காக திடீரென குற்றம்சாட்டியுள்ளார். இப்பிரச்னையில் ஆரம்பம் முதல் தமிழர்களுக்கு ஆதரவாகவே பாஜக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்கினால் அது இந்தியாவுக்கு எதிராகவே பயன்படுத்தப்படும்.அதுபோல இலங்கைக்கு இந்தியா ஆயுதம் வழங்கினால் அது தமிழர்களைக் கொல்லவே பயன்படும் என்பதை பாஜக உணர்ந்து இருந்தது. அதனால் தான் பாஜக ஆட்சியின்போது இலங்கை அரசு பஸறை வற்புறுத்தியும் ஆயுதங்களை வழங்க வாஜ்பாய் மறுத்தார். அதோடு இலங்கை ராணுவ வீரர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கவும் பாஜக ஆட்சியில் மறுக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.
பாஜக மீது குற்றம்சாட்டிய ப. சிதம்பரம், இலங்கைக்கு செய்யப்பட்ட ஆயுத உதவி, ராணுவ உதவி மற்றும் தமிழக மீனவர் பிரச்னை பற்றி எதுவும் பேசாதது ஏன்காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பிரிட்டன் பிரதமருக்கு இருந்த தைரியம் கூட நமது பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
தேர்தல் நெருங்குவதால் இலங்கைத் தமிழர் பிரச்னையில் மக்களை திசைதிருப்ப காங்கிரஸ் நாடகம் நடத்த தொடங்கியுள்ளது. அதனை ப. சிதம்பரம் சென்னையில் தொடங்கியுள்ளார்.இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச 100 சதவீதம் பொறுப்பு என்றால் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு 50 சதவீத தார்மீக பொறுப்பு உள்ளது.உண்மைகளை மறைக்க மற்றவர்கள் மீது குற்றம்சாட்டுவதை ப. சிதம்பரம் தவிர்க்க வேண்டும் என்றார் இல. கணேசன்.
Subscribe to:
Posts (Atom)