15.12.13

ஈரோடு-பழனி ரயில் திட்டம் சாத்தியமில்லை: தெற்கு ரயில்வே பொதுமேலாளர்


ஈரோடு-பழனி ரயில் திட்டம் சாத்தியமில்லை என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா கூறினார்.

ஈரோடு ரயில்வே மருத்துவமனை அருகே, துணை மண்டல ரயில்வே மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் பெயர்ப் பலகையை வெள்ளிக்கிழமை திறந்துவைத்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஒவ்வொரு ஆண்டும் முக்கிய ரயில் நிலையங்களில் ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். கோவை முதல் சேலம் வரையிலான ரயில் நிலையங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. ஈரோடு ரயில்வே காலனியில் துணைக் கோட்ட ரயில்வே மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
ஈரோடு ரயில் நிலையத்தில் 2 எஸ்கலேட்டர்கள் (நகரும் படிகட்டுகள்), 2 லிஃப்ட்கள் அமைப்பதற்கான உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பணி இப்போது நடந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் ரயில்களில் இருந்து இறங்கி ரயில் நிலையத்தின் கீழ் பகுதிக்கு வர வசதியாக பேட்டரி கார், நன்கொடை மூலமாகப் பெற்று இயக்கப்படும்.
ஈரோடு-பழனி ரயில் திட்டம் குறித்து ஆய்வுப் பணிகள் நடந்ததில் எதிர்மறை முடிவுகள் தான் கிடைத்துள்ளன. ஈரோடு-பழனி இடையே ரயில்வே துறைக்கு லாபம் கிடைக்கும் அளவுக்கு பயணிகளின் போக்குவரத்து இல்லை. எனவே, ஈரோடு-பழனி ரயில் திட்டம் சாத்தியமில்லை. இத்திட்டத்தை ரயில்வே துறை நிறுத்திவைத்துள்ளது.
வெண்டிபாளையம் ரயில்வே மேம்பாலம் அமைக்க இப்போது போதிய நிதி இல்லை. நிதி வசதி கிடைத்தவுடன் மேம்பாலம் அமைக்கப்படும் என்றார்.
பேட்டியின்போது, சேலம் கோட்ட ரயில்வே பொதுமேலாளர் சுஜாதா ஜெயராஜ், அதிகாரிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment