21.11.13

கோவா: தொடங்கியது சர்வதேச திரைப்பட விழா

கோவா தலைநகர் பனாஜியில் சர்வதேச திரைப்பட விழா புதன்கிழமை விமர்சையாக தொடங்கியது. இதில், பழம் பெரும் ஹிந்தி நடிகை வஹீதா ரஹ்மானுக்கு இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்ட நினைவு விருது வழங்கப்பட்டது. "இந்த விருது தனக்கு மிகுந்த கொளரவத்தை அளித்துள்ளது' என்று வஹீதா ரஹ்மான் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்த விழாவில் ஹாலிவுட் நடிகை சூசன் சரன்டன், நடிகர் கமலஹாசன், நடிகை ரேகா, பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே, சுகாசினி மணிரத்னம் உள்ளிட்ட திரைப்பட பிரபலங்கள் பங்கேற்றனர்.
பத்து நாள்கள் நடைபெறும் இந்த விழாவில், 328 படங்கள் திரையிடப்படுகின்றன. அதில், 75 நாடுகளைச் சேர்ந்த 171 சர்வதேச படங்களும் அடங்கும். தொடக்க விழாவில் உரையாற்றிய கோவா முதல்வர் மனோஹர் பாரிக்கர், "கடந்த 9 ஆண்டுகளாக சர்வதேசத் திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் கொண்டாட்டத்தின் போது, சர்வதேச திரைப்பட விழாவுக்கென பிரத்யேக நிரந்தரக் கட்டடம் கடலோரமாக உள்ள மிராமர் பகுதியில் திறக்கப்படும்' என்று கூறினார்.
விழாவில் பங்கேற்ற மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சர்வதேச திரைப்பட விழா வழக்கம் போல் அடுத்த ஆண்டும் கோவாவிலேயே நடைபெறும். இந்த விழா நடைபெறும் இடத்தை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுவது வெறும் வதந்தி' என்று கூறினார்.
கோவா மாநிலம் பனாஜியில், 44-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவை பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மான் புதன்கிழமை குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைக்கிறார்.
உடன், மத்திய தகவல் - ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர்.

No comments:

Post a Comment