13.12.13

மிக்-21 ரக விமானத்துக்கு பதிலாக "தேஜஸ்' விரைவில் இணைப்பு



மிக்-21 ரக போர் விமானத்துக்கு பதிலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் விமானப்படைப் பிரிவில் அதிகாரப்பூர்வமாக விரைவில் இணைக்கப்பட உள்ளது.
இந்தத் தகவலை விமானப்படைத் தலைமைத் தளபதி என்.ஏ.கே.பிரவுன் கிழக்கு விமானப்படைப் பிரிவு தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து பிரவுன் மேலும் கூறியதாவது:
தேஜாஸ் மார்க்-1 ரகத்தில் 40 விமானங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அடுத்த ஆண்டு இறுதியில் தேஜஸ் விமானம் போருக்குத் தயார் நிலையில் இருக்கும்.
தேஜஸின் பிறப்பிடமான பெங்களூருவில் டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெறும் விழாவில் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோனி தேஜஸ் போர் விமானத்தை அதிகாரப்பூர்வமாக விமானப்படையிடம் ஒப்படைக்கிறார்.
தேஜஸ் மார்க்-2 ரக விமானத்தில் ரேடார் வசதி உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. காலப்போக்கில் இதுவும் விமானப்படையில் இணைக்கப்படும்.
50 ஆண்டுகளாக விமானப்படைப் பிரிவில் சேவை புரிந்த மிக்-21 ரக போர் விமானத்துக்கு மேற்கு வங்கத்தில் உள்ள கலாய்குன்டா விமானப்படைத் தளத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் விடை கொடுக்கப்பட்டது. இது விமானப் படையினருக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வாகும். ஏனெனில், நான் உள்பட பல போர் விமான பைலட்டுகள் பயிற்சி எடுத்தது மிக்-21 ரக விமானங்களில்தான். எனவே, எங்கள் கண்கள் கலங்குகின்றன. இந்த ரக விமானங்கள் தங்களது பணியை செவ்வனே செய்தன என்று பிரவுன் கூறினார்.
வடகிழக்குப் பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "வடகிழக்குப் பகுதி பாதுகாப்பே எங்களுக்கு மிகவும் முக்கியம். மலைப்பாங்கான பகுதிகளில் ரேடார் கருவிகளை நிறுவத் திட்டமிட்டுள்ளோம்' என்றார் பிரவுன். மேலும், பஞ்சாப் மாநிலம் சிர்சாவில் தயாரிக்கப்பட்ட சுகோய் போர் விமானம் அசாமின் தீஸ்பூர் தளத்தில் அடுத்த ஆண்டு இணைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு விமானப்படைப் பிரிவுக்கு தனது மனைவி கிரணுடன் 2 நாள் பயணம் மேற்கொண்ட அவர், கமாண்டர்களின் மாநாட்டில் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment