13.12.13

சூரியநெல்லி பாலியல் வழக்கு: மறு விசாரணை கோரும் மனு ஏற்பு

சூரியநெல்லி பாலியல் பலாத்கார விவகாரத்தில் மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மறு விசாரணை கோரும் மனுவை கேரள உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
சூரியநெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இருந்து மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் கடந்த 2007 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் மறுவிசாரணை கோரி பாதிக்கப்பட்ட பெண் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.ஸ்ரீஜெகன், கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர். பின்னர் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
கேரள மாநிலத்தில், கடந்த 1996ஆம் ஆண்டு 16 வயது இளம்பெண் 40-க்கும் மேற்பட்ட முக்கியப் பிரமுகர்களால், பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கடந்த 2000-வது ஆண்டில் இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 36 பேருக்கு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இருப்பினும், இந்த வழக்கில் தண்டனை பெற்ற 36 பேரில் ,தர்மராஜன் என்பவருக்கு மட்டும் கேரள உயர் நீதிமன்றம் 5 ஆண்டு தண்டனை வழங்கியதுடன் மற்ற 35 பேரும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்தது. மேலும் மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அவரையும் விடுவித்தது.
இதையடுத்து மறுவிசாரணை கோரி பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்குமாறும் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment