இந்தியாவில் நான்கு நாள்கள் அரசுமுறைப் பயணமாக வியாழக்கிழமை தில்லி வந்த ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்ஸாய் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தவிருந்த சிறப்புரை திடீரென ரத்து செய்யப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த சில நாள்களாக பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில், நாடாளுமன்ற அலுவல் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை மாலையில் இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவரும், கல்வியாளருமான ஹிரேன் முகர்ஜி நினைவுச் சொற்பொழிவுக்கு நாடாளுமன்றச் செயலகம் ஏற்பாடு செய்திருந்தது.
அதில் "அரசியலமைப்பு, ஜனநாயகத்தில் ஆப்கானிஸ்தானின் அனுபவங்கள்' என்ற தலைப்பில் ஆப்கன் அதிபர் ஹமீது கர்ஸாய் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில், ஹமீது கர்ஸாயின் நிகழ்ச்சி திடீரென வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து நாடாளுமன்றச் செயலக வட்டாரங்களில் விசாரித்தபோது, "வாரத்தின் கடைசி நாளில் நடைபெறும் நிகழ்வில் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் வெளிநாட்டு அதிபருக்கு அது அவமரியாதை அளிப்பது போல இருக்கும். எனவே கர்ஸாயின் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது' எனக் கூறப்பட்டது.
தில்லியில் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை வெள்ளிக்கிழமை சந்திக்கும் கர்ஸாய், மாலையில் புணே செல்கிறார். சனிக்கிழமை புணே நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு அங்கிருந்து நேரடியாக ஆப்கன் தலைநகர் காபூல் திரும்புகிறார்.
இதற்கிடையே, 2010, 2011, 2012-ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த நாடாளுமன்றவாதி விருதை முறையே அருண் ஜேட்லி, கரண் சிங், சரத் யாதவ் ஆகியோருக்கு வழங்கும் நிகழ்ச்சிக்கு இந்த வார இறுதியில் நாடாளுமன்றச் செயலகம் ஏற்பாடு செய்திருந்தது.
அந்த நிகழ்ச்சியும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment