தெலங்கானா விவகாரம், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்த நடவடிக்கை உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வியாழக்கிழமை எழுப்பினர். இதையடுத்து, நீடித்த அமளியால் மக்களவை அலுவல் நண்பகலுக்குப் பிறகும், மாநிலங்களவை அலுவல் இரு முறை ஒத்திவைக்கப்பட்டு பிற்பகல் 2 மணிக்குப் பின் நாள் முழுவதுமாகவும் ஒத்திவைக்கப்பட்டன.
மக்களவை அதன் தலைவர் மீரா குமார் தலைமையில் தொடங்கியதும், ஆந்திரத்தைச் சேர்ந்த தெலங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு உறுப்பினர்கள் வழக்கம் போல தெலங்கானா விவகாரத்தை மையப் பகுதிக்கு வந்து எழுப்பினர்.
ஷிண்டேவுக்கு எதிர்ப்பு: பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் "மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே மன்னிப்புக் கேட்ட வேண்டும்' என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன் மையப் பகுதிக்கு வந்து குரல் எழுப்பினர். நக்ஸல்களை ஒடுக்க மாநில அரசு சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிகார் முதல்வருக்கு சுஷீல் குமார் ஷிண்டே அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். அதைக் கண்டிக்கும் வகையில், ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர். இந்த அமளியைத் தொடர்ந்து, மக்களவை அலுவலை நண்பகல் 12 மணி வரை மீரா குமார் ஒத்திவைத்தார். பின்னர் அவை கூடியதும் காலையில் எழுப்பிய அதே பிரச்னைகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர்.
துணை மானியக் கோரிக்கை நிறைவேற்றம்: இந்த அமளிக்கு இடையே, மீரா குமார் கேட்டுக் கொண்டபடி, 2013-14 நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் மீதான துணை மானியக் கோரிக்கை அறிக்கையை ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் குமாரி செல்ஜா மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.
மக்களவை ஒத்திவைப்பு: அப்போது பேசிய மீரா குமார், "மையப் பகுதியில் கூச்சல் போடாமல் அவரவர் இருக்கைகளுக்கு உறுப்பினர்கள் திரும்பினால், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கிறேன்.
அந்த நோட்டீûஸ அனுமதிக்கத் தேவைப்படும் 50 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறதா என்பதைச் சரி பார்க்க வேண்டும்' என்றார். அதைப் பொருள்படுத்தாமல் உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டபடி இருந்தனர். இதையடுத்து, மக்களவை அலுவலை நாள் முழுவதுமாக மீரா குமார் ஒத்திவைத்தார்.
மாநிலங்களவையில்...: மாநிலங்களவை அதன் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையில் தொடங்கியதும் தெலங்கானாவுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் "ஆந்திரத்தைக் காப்பாற்றுக' என்ற பதாகைகளுடன் மையப் பகுதிக்கு வந்து குரல் எழுப்பினர். இக் கூச்சல், குழப்பத்தால் அவை நடவடிக்கை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் துணைத் தலைவர் பி.ஜே. குரியன் தலைமையில் அவை கூடியதும் காலையில் எழுப்பிய அதே பிரச்னைகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். இதையடுத்து, அவை நடவடிக்கையை பிற்பகல் 2 மணி வரை குரியன் ஒத்திவைத்தார்.
ஆளுநர் சம்பள மசோதா?: பிற்பகலில் அவை கூடியபோதும் அமளி நீடித்தது. அப்போது, ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே 2013-14 நிதியாண்டுக்கான ரயில்வே துணை மானியக் கோரிக்கை அறிக்கையைத் தாக்கல் செய்தார். பின்னர் ஆளுநர்களின் சம்பளம் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே தாக்கல் செய்ய முற்பட்டார்.
அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மிகவும் உரத்த குரலில் கூச்சலிட்டதால், ஷிண்டே பேசியது பி.ஜே. குரியனுக்குக் கேட்கவில்லை. இதையடுத்து, மாநிலங்களவை அலுவலை நாள் முழுவதுமாக அவர் ஒத்திவைத்தார்.
இலங்கைக் கடற்படைச் செயல்: தமிழக எம்.பி.க்கள் கண்டனம்
தமிழக மீனவர்களைச் சிறைப்பிடித்த இலங்கைக் கடற்படைக்குக் கண்டனம் தெரிவித்து தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு அவைகளிலும் வியாழக்கிழமை குரல் எழுப்பினர்.
மக்களவையில் டி.ஆர். பாலு தலைமையில் திமுக உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை எழுப்பினர். டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ். விஜயன், ஹெலன் டேவிட்சன், ஜெயதுரை உள்ளிட்டோர் மையப் பகுதிக்கு வந்து குரல் கொடுத்தனர்.
அதிமுக உறுப்பினர்கள் தம்பிதுரை, செம்மலை ஆகியோர், "கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தை நிறுத்துவது குறித்து விவாதிக்க வேண்டும்' என்று குரல் கொடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக ஓ.எஸ். மணியன், சிவசாமி, டாக்டர் வேணுகோபால் உள்ளிட்டோர் அவையின் மையப் பகுதிக்கு வந்து குரல் எழுப்பினர். நண்பகலில் மக்களவை கூடியதும் தமிழக உறுப்பினர்கள் இலங்கைக் கடற்படைக்கு எதிராக மீண்டும் குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவையில்...:தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட விவகாரத்தை மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் வா. மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா ஆகியோர் எழுப்பினர். "இலங்கை கடற்படை அத்துமீறிச் செயல்படுகிறது. அதனால், சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களைக் காக்க வேண்டும்' என்று அவர் குரல் கொடுத்தார். திமுக உறுப்பினர் கனிமொழி, "நீடித்துவரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்த வேண்டும்' என்றார். அவருக்கு ஆதரவாக திமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.
No comments:
Post a Comment