13.12.13

"ஜம்மு-காஷ்மீர் குடியரசு தினம்' கொண்டாட உத்தரவிடக்கோரி மனு

ஜம்மு-காஷ்மீரில் நவம்பர் 17ஆம் தேதி மாநில குடியரசு தினத்தை கொண்டாட அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் முன்னாள் வனத்துறை அதிகாரி அப்துல் கயூம் கான் சார்பில் அவரது வழக்குரைஞர் ஷா புதன்கிழமை தாக்கல் செய்த மனு கூறியிருப்பதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தனி அரசியலமைப்பைக் கொண்டுள்ளது. இந்த அரசியலமைப்பு 1956ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி சட்டப் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாநிலத்துக்காக தனி கொடியும் பெறப்பட்டுள்ளது.
எனவே, இந்த நாளை மாநிலத்தின் குடியரசு தினமாக அரசு கொண்டாட வேண்டும். அந்த நாளில் அரசியலமைப்பின் கீழ் அதிகாரம் படைத்த ஆளுநர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள் ஆகியோர் அரசு அலுவலகங்களிலும், பிற இடங்களிலும் மாநிலக் கொடியை ஏற்ற வேண்டும்.
தற்போது மாநில குடியரசு நாளில், மாநில கொடி ஏற்றுவதில் அரசு அதிகாரிகள் அக்கறை காட்டாதது என்னைப் போன்றவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக உள்ளது. மேலும், இது அரசியலமைப்பு சட்ட விதியை மீறும் செயலாகும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவறான தகவல்-பாஜக.: ஜம்மு-காஷ்மீர் மாநில பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஜிதேந்திர சிங் கூறுகையில், ""மாநில குடியரசு தினம் கொண்டாட வேண்டும் என்று விஷமத்தனமாகவும், அபத்தமாகவும், உண்மைக்கு புறம்பாகவும், அரசியலமைப்பு விதிமுறையை மீறும் விதத்திலும் கோரப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பே 1957ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதியில் அங்கு குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இதனையும் ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் நீதிமன்றத்தில் தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

No comments:

Post a Comment