ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல முகங்கள் உண்டு. எப்போது தனக்குத் தேவையோ அப்போது அவன் அந்த முகத்தைக் காட்டுவான். அப்படி வெளிப்பட்ட ஒருவனது இன்னொரு முகம் தான் ‘மறுமுகம்’ என்று படம்பற்றி அறிமுகம் தருகிறார் இயக்குநர் எஸ்.கமல்.
”அன்போ, காதலோ, பாசமோ அடக்கி வைக்கப் படும் போது ஒரு கட்டத்தில் வெடித்து விடும் அபாயமுள்ளது. ‘மறுமுகம்’ நாயகன் பெற்றோரை இழந்தவன். கைநிறைய பணமுண்டு. ஆனால் மனம் நிறைய அன்பு கிடைக்காமல் ஏங்குகிறான். பாசத்துக்கு ஏங்கும் அவனுக்கு ஒரு காதல் வருகிறது. காதலி கிடைக்கிறாள். அவள்மேல் தீராத காதல். ஆனால் அவள் விலகிச் சென்று விடுவாளோ என எண்ணுகிறான். அளவற்ற காதல் வெடிக்கும் போது அச்சுறுத்தலாக- வன்முறையாக மாறுகிறது. அவன் மன நோயாளியோ என்று எண்ணவைக்கிறது. ஒன்றின் மீது அளவற்ற அன்பு வைத்தால் பைத்தியமாக இருக்கிறான் என்றுதானே சொல்வார்கள்? மறுமுகம் நாயகன் பைத்தியமும் அல்ல, மனநோயாளியும் அல்ல. மாறாத காதலை விரும்பும் ஒரு மனிதன்தான்.” நீண்ட விளக்கம் தருகிற இயக்குநர் கமல், “இது ஒரு அழகான காதல் கதைதான். அந்த மறுமுகம் வெளிப்பாட்டால் லவ் த்ரில்லராக மாறுகிறது.” என்கிறார் தெளிவாக.
நாயகனாக டேனியல் பாலாஜி, நாயகியாக ப்ரீத்திதாஸ் நடித்துள்ளார்கள். பானுசந்தர், அனூப், உமா பத்மநாபன், போன்றோரும் உண்டு.
ஆண்டிப்பட்டிக்காரரான இயக்குநர் எஸ்.கமல், ஒரு திரைப்படக் கல்லூரி மாணவர்.ஒளிப்பதிவுத்துறை பயின்றவர். பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேல் இவரது வகுப்புத் தோழர். பின்னர் ஆர்வப்பட்டு இயக்கத்துக்கு மாறினார் ஆபாவாணன், அரவிந்தராஜ் படக்குழுவில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். விளம்பரப் படங்கள், யூடிவி, ரேடியோ மிர்ச்சி என்று பணியாற்றி விட்டு பெரிய திரைக்கு வந்திருக்கிறார்.
‘மறுமுகம்’ என்னவோ காதல் கதைதான். ஆனால் கமலிடம் ஒரு நல்ல நட்பின் கதை இருக்கிறது. இவர் படித்தது குன்னூர் செயின்ட் ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில். அந்தப் பள்ளிவயது நண்பர்கள் அனைவரும் இன்னும் தொடர்பில் இருப்பது மட்டுமல்லாமல் ‘மறுமுகம்’ தயாரிப்பிலும் 60 பேரும் இணைந்திருக்கிறார்கள். இந்த நண்பர்கள் மொழி கடந்து, பிரதேச எல்லை கடந்து, நாடு கடந்தும் இருக்கிறார்கள். அட. என்ன ஒரு நட்புக்கூட்டணி!
இந்த நட்புக் கூட்டணி அமைத்த படநிறுவனம்தான் ‘எண்டர் டெய்ன்மெண்ட் அன்லிமிட்டட்’.இவர்கள் ஏற்கெனவே மலையாளத்தில் ‘க்ரைம் ஸ்டோரி’ என்கிற படத்தை எடுத்து மிதமான வெற்றியும் பெற்றிருக்கிறர்கள்.
‘மறுமுகம்’ படத்துக்கு ஒளிப்பதிவு கனகராஜ். இசை–அகஸ்தியா. இவர் தெலுங்கில் இசையமைத்துள்ள அனுபவம் பெற்றவர். நடனம்–பாபி, ஹெய்ட் மஞ்சு, ஸ்டண்ட் -ஆக்ஷன் பிரகாஷ், படத்தொகுப்பு–ஆர்.டி.அண்ணாதுரை, இவர் ஆபாவாணன் படக்குழு அணியின் படத் தொகுப்பாளர். கதை, திரைக்கதை, இயக்கம்-.எஸ்.கமல்.தயாரிப்பு சஞ்சய் டாங்கி.
கொடைக்கானல், குற்றாலம், அச்சன்கோவில் என சுற்றி 35 நாட்களில் முழுப் படத்தை முடித்துள்ளார்கள்.
ஒளி,ஒலி தொழில்நுட்ப ரீதியிலும் பேசப்படும் படமாக இருக்கும்படி நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது.
‘மறுமுகம்’ ஜனவரி வெளியீடு! புதுமையான காதல் கதையைக் காண தயாராக இருங்கள்.
No comments:
Post a Comment