26.12.13

எகிப்து முன்னாள் பிரதமர் கைது



எகிப்து முன்னாள் பிரதமர் ஹிஷம் காண்டிலை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்சி நடத்திய இடைக்கால அரசில் பிரதமராக இருந்த காண்டில், சூடானுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது, தலைநகர் கெய்ரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள பாலைவனத்தில் கைது செய்யப்பட்டதாக எகிப்து நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காண்டில் பதவியில் இருந்தபோது, 1996-ஆம் ஆண்டில் தனியார்மயமாக்கப்பட்ட ஒரு நிறுவனத்தை மீண்டும் தேசியமயமாக்கும்படி ஆளுங்கட்சி உத்தரவிட்டதை செயல்படுத்த மறுத்ததால், அவருக்கு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்பை, கெய்ரோ மேல்முறையீட்டு நீதிமன்றம் செப்டம்பர் மாதம் உறுதி செய்தது. எகிப்தில் ஜூலை மாதம் ராணுவப் புரட்சி ஏற்பட்டு, மோர்சியின் அதிபர் பதவி பறிபோன பிறகு காண்டில் வெளியில் அதிகம் தலைகாட்டாமல் இருந்தார்.
ராணுவப் புரட்சியால் எகிப்தில் நிலவி வரும் பதற்றத்தை தணிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளின் மத்தியஸ்தர்கள் ராணுவ அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, மோர்சிக்கு ஆதரவான இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதியாக காண்டில் பங்கேற்றார்.
ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை ஆகஸ்ட் மாதம் தோல்வியில் முடிந்தது. ஏனெனில், பேச்சுவார்த்தைக்கு உடன்படாத ராணுவ அரசு, போலீஸாரை ஏவிவிட்டு தாக்குதல் நடத்தியதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம் தலைவர்கள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment