மொழியால் மாறுபட்டாலும், அனைவரையும் ஒருங்கிணைப்பது இசைதான் என்றார் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மஞ்சுளா ரெங்கராஜன்.
கும்பகோணம் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம், சரஸ்வதி கானசபா இணைந்து நடத்தும் 8-ம் ஆண்டு மார்கழி இசைவிழா டி.கே. ரமணன், டி.கே. சரவணன் குழுவினரின் நாகஸ்வரத்துடன் சரஸ்வதி பாடசாலை அன்னி பெசண்ட் அரங்கத்தில் செவ்வாய்கிழமை தொடங்கியது.
விழாவிற்கு சிட்டியூனியன் வங்கி தலைவர் எஸ். பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். சரஸ்வதி கானசபா துணைத் தலைவர் வழக்குரைஞர் எஸ். கோதண்டராமன், டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் எஸ். பாஸ்கர், செயலர் எஸ். பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர்மன்றத் தலைவர் ரத்னா சேகர், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மஞ்சுளா ரெங்கராஜன், விலாஷினி காமகோடி, மகேஸ்வரி பாஸ்கர், சத்யா செந்தில்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
தொடர்ந்து, மார்கழி இசை விழாவை தொடக்கிவைத்து மஞ்சுளா ரெங்கராஜன் பேசியது:
இசை என்பது நம்முடன் கூட இருப்பது. பிறந்தது முதல் இசையுடனே சேர்ந்து வாழ்கிறோம். பிறக்கும்போது தாய் தாலாட்டு பாடி நம்மை மகிழ்விக்கிறார். பள்ளி, கல்லூரிகளில் ஒன்றாகக் கூடி பாடல்களை பாடி மகிழ்ச்சி அடைந்திருக்கிறோம். பல்வேறு காலகட்டங்களில் நம்மை இசை ஒருங்கிணைக்கிறது. பாரம்பரியத்துடன் தலைமுறை தலைமுறையாக அந்த இசையை பேணி காத்து வருவது நமக்கு பெருமையை அளிக்கிறது. மார்கழி மாதம் சிறந்த தமிழ்மாதம். இசையால் நாம் அனைவரும் ஒரே இடத்தில் குவிந்து நமது மனமும் ஒருமுனைப்படுத்தப்படுகிறது. நமக்கு தெரியாத மொழிகளில் பலர் பாடுகின்றனர். ஆனால், இசையை ரசிப்பதற்கு மொழி பேதமில்லை.
சென்னைக்கு இணையாக இங்கு இசை நிகழ்ச்சி நடத்தப்படுவது, இந்த ஊருக்கு கிடைத்துள்ள பெருமை. மொழியால் மாறுபட்டாலும் அனைவரையும் வல்லமை மிக்க இசை ஒருங்கிணைக்கிறது என்றார்.
ரோட்டரி சங்கத்தின் திட்டத் தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
தொடர்ந்து ஸ்ரீராம், அனுராதா ஸ்ரீராம் இருவரும் சரஸ்வதி சங்கீத சேவாரத்னா என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சிகளை கிருஷ்ணசாமி மற்றும் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
தொடர்ந்து ஸ்ரீராம், அனுராதா ஸ்ரீராமின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
No comments:
Post a Comment