மத்திய சிறை இருந்த இடத்தில் கட்டப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரியின் புதிய கட்டடத்தில் எம்.பி.பி.எஸ். வகுப்புகள் புதன்கிழமை (டிச.4) முதல் தொடங்கப்பட்டன.
இது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வரும் மருத்துவக் கல்வி இயக்குநருமான டாக்டர் வே.கனகசபை கூறியது:
சென்ட்ரல் ஜெயில் என்று அழைக்கப்பட்ட சென்னை மத்திய சிறைச்சாலையானது பழமை மற்றும் இடப்பற்றாக்குறை காரணமாக முழுவதுமாக இடிக்கப்பட்டது.
இதில் 11 ஏக்கர் நிலம் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 2010-ஆம் ஆண்டு கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ. 60 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த புதிய கல்லூரி கட்டடத்தை 2013 மார்ச் 1-ஆம் தேதி முல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இதில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான மருத்துவக்கல்லூரி வகுப்புகள் நடத்தப்பட்டன. 148 மாணவர்களும், 102 மாணவிகளும் மொத்தம் 250 பேர் வகுப்புக்கு வந்திருந்தனர். இந்த வளாகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும்.
இந்த கட்டடத்துக்கு அருகில் 450 மாணவிகள் தங்கும் அளவில் விடுதி ஒன்றும் கட்டப்பட உள்ளது. இதை ரூ. 20 கோடி செலவில் கட்ட தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரியின் புதிய கட்டட தரைத் தளத்தையும் சேர்த்து மொத்தம் 6 மாடிகளைக் கொண்டது. இதில் மாணவர்களுக்கு மேஜை, நாற்காலிகள் வாங்க ரூ. 6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்லூரி வளாகத்தை பாதுகாப்பதற்காக 10 காவலாளிகள் நியமிக்கப்பட உள்ளனர் என்று கூறினார்.
முன்னதாக எம்.பி.பி.எஸ் வகுப்புகள் நடப்பதை சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு மாணவர்களிடம் பேசியதாவது:
மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களாகிய நீங்கள் இந்த புதிய கட்டடத்தில் உள்ள பல்வேறு வசதிகளை பயன்படுத்தி நன்கு படித்து நமது நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்றார்.
6 மாடி கட்டடம்
புதிதாக திறக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி கட்டடம் தரை தளத்துடன் கூடிய 6 மாடிகளைக் கொண்டது. இதில் தரைத்தளம் உடற்கூறு இயல் துறை, முதல் மாடி முழுவதும் நூலகம், 2-ஆவது மாடி உயிர் வேதியியல் மற்றும் உடலியல் நிர்வாக இயற்பியல் துறைகள், 3-ஆவது மாடி நோய்குறியியல் துறை, 4-ஆவது மாடி மருந்தியல் மற்றும் நுண்ணுயிரியல் துறைகள், 5-ஆவது மாடி சட்டம் சார்ந்த மருத்துவம் மற்றும் சமூக மருந்தியல் துறைகள், 6-ஆவது மாடி முழுவதும் தேர்வு அறை என ஒதுக்கப்பட்டுள்ளது. 2,3,4,5 மாடிகளில் சுமார் 250 மாணவர்கள் அமரும் வகையில் தலா ஒரு வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 600 பேர் அமர்ந்து தேர்வு எழுதும் வகையில் 6-ஆவது மாடி அமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment