5.12.13

சர்வேயர்கள் பற்றாக்குறையால் தள்ளாடும் திருவள்ளூர் வட்டம்

நில அளவைப் பணி, உட்பிரிவு பட்டா மாற்றம் போன்ற பணிகளுக்கு தேவையான சர்வேயர்கள் இல்லாததாலும், இருக்கும் சர்வேயர்களை கண்டுபிடிக்க முடியாததாலும் திருவள்ளூர் வட்டத்துக்கு உள்பட்ட கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தலைமையிடத்தையும் சேர்த்து மொத்தம் 9 வட்டங்கள் உள்ளன. இந்த வட்டத்தில் 9 பிர்காக்களாக (குறு வட்டங்கள்) பிரிக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் வட்டத்தில் ஒரு பிர்காவுக்கு ஒரு சர்வேயர் என மொத்தம் 9 சர்வேயர்கள், கூடுதலாக அலுவலகப் பணிக்கு 2 சர்வேயர்கள், ஒரு துணை வட்டாட்சியர் மற்றும் 2 உதவியாளர்கள் என மொத்தம் 15 பேர் கொண்ட குழுவினர் தேவை. ஆனால் வெறும் 6 முதல் 8 சர்வேயர்கள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பொதுமக்கள் பட்டா, உட்பிரிவு பட்டாக்கள் மற்றும் சொத்து பாகப்பிரிவினை ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும்போது வி.ஏ.ஓ.க்கள் அந்த இடம் குறித்த விவரத்தை சரிபார்த்து நில அளவைக்காக சர்வேயருக்கு அனுப்புவர்.
சர்வேயர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் நிலத்தை அளந்து கொடுத்தால் மட்டுமே பட்டாக்கள் வழங்க முடியும். ஆனால் சர்வேயர்கள் பற்றாக்குறையால் நில அளவைப் பணிகள் தாமதமானதுடன் பட்டாக்களை குறித்த காலத்துக்குப் பெற முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
மேலும் போலீஸ் நிலையங்களில் நிலம் தொடர்பான பிரச்னைகளுக்கு சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள் ஏற்படாமல் தீர்வு காண சர்வேயர் வந்து நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும் என போலீஸாரும், பாதிக்கப்பட்டவர்களும் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் அது போன்ற பிரச்னைகளும் சர்வேயர்கள் பற்றாக்குறையால் நிலுவையில் உள்ளன.
இது குறித்து சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர் கூறியது: திருவள்ளூர் வட்டத்துக்கு போதுமான அளவு சர்வேயர்கள் இல்லை என்பது உண்மை. முன்பெல்லாம் பெரும்பாலும் 10 ஏக்கர், 20 ஏக்கர் என ஒரே நபர்களின் நிலமாக இருக்கும்.
அப்போது உருவாக்கப்பட்ட சர்வேயர் பணியிடங்கள் தற்போது போதுமானதாக இல்லை. ஏனென்றால் ஏராளமான விளை நிலங்கள் இப்போது வீட்டு நிலங்களாக மாறிவிட்டன. அதை அளந்து உட்பிரிவு பட்டா போடும் பணி அதிகரித்துள்ளது. இதனால் கூடுதல் பணியிடங்களை அரசு உருவாக்க வேண்டும்.
தவிர, நீதிமன்றப் பணிகள், போலீஸ் நிலையப் பணிகள், அரசுப் பணிகள் போன்றவற்றை கணக்கெடுப்பதும் இவர்களுக்கு கூடுதல் பணியாக உள்ளது என்றார்.

No comments:

Post a Comment