ஏற்காடு இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மாறன், மற்ற வேட்பாளர்களைக் காட்டிலும் கூடுதலாக செலவு செய்திருப்பதாக கணக்கு காட்டியுள்ளார்.
இதற்கிடையே செலவுக்கான தொகை எந்த வழியில் கிடைத்தது என்பதைத் தெரிவிக்கும்படி தேர்தல் நடத்தும் அலுவலர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் செலவினங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காக, வேட்பாளர்கள் தினமும் மேற்கொள்ளும் செலவினங்கள் குறித்து பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் செலவுக் கணக்குகளை சரிபார்த்து ஆய்வு செய்வதற்காக செலவுக் கணக்கு மேற்பார்வையாளர் ஒருவரும் நியமிக்கப்படுவார்.
ஏற்காடு இடைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி, சுயேச்சைகள் உள்ளிட்ட 11 பேரும் மனு தாக்கலில் இருந்து தாங்கள் செய்த செலவுக் கணக்குகளை இதுவரையிலும் இருமுறை தாக்கல் செய்துள்ளனர். அதாவது, கடந்த 23-ஆம் தேதி வரை, 27-ஆம் தேதி வரை என இரு முறை கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, திமுக வேட்பாளர் வெ.மாறன் ரூ.3.05 லட்சம் செலவு செய்து அதிக செலவு செய்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் பி.சரோஜா ரூ.1.75 லட்சம் செலவு செய்திருப்பதாகக் கூறியுள்ளார். பெரும்பாலான சுயேச்சை வேட்பாளர்கள் செலவு ஏதும் செய்யவில்லை.
அதிமுக வேட்பாளர் தாக்கல் செய்துள்ள செலவினக் கணக்கில் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கட்சியின் தலைமைத் தேர்தல் அலுவலக இடத்துக்கு முன்பணமாக ரூ.2 ஆயிரம் மட்டும் கொடுத்ததாகவும், இரண்டு பிளக்ஸ் பேனர்களுக்கு ரூ.900 செலவிட்டதாகவும், இரு வாழை மரங்களுக்கு ரூ.200 செலவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, திமுக வேட்பாளர் மாறன் தனது தேர்தல் செலவுகளை இதற்கென தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், இவரது கணக்குகளை ஆய்வு செய்த தேர்தல் நடத்தும் அலுவலர் டி.சபாபதி, இந்தச் செலவுகளுக்கான பணம் எங்கிருந்து வந்தது, ஏன் வங்கிக் கணக்கில் இருந்து செலவு மேற்கொள்ளப்படவில்லை என்பது போன்றக் கேள்விகளை எழுப்பியுள்ளார். இதற்கான விளக்கம் அடுத்து தாக்கல் செய்யப்படும் கணக்குப் படிவத்தில் இடம் பெறக் கூடும் என்று சபாபதி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சம் ரூ.16 லட்சம் வரையிலும் செலவு செய்யலாம். ஒட்டு மொத்த தேர்தல் செலவுகளை தேர்தல் முடிவடைந்த ஒரு மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதி. கணக்கு சமர்ப்பிக்காதவர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment