18.11.13

எம்.பியானதால் நடிக்க மறுப்பு : நடிகை ரம்யா மீது பட அதிபர் புகார்!!



நடிகை ரம்யா எம்.பியானதால் கன்னடத்தில் நடித்து வந்த நீர்டோஸ் படத்தில் இருந்து பாதியில் வெளியேறி விட்டார். இதனால் அப்படம் முடிவடையாமல் முடங்கி போய் உள்ளது. இயக்குனரும், தயாரிப்பாளரும் தவிக்கிறார்கள்.
ரம்யா தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி படங்களில் நடித்துள்ளார். கன்னடத்திலும் முன்னணி நடிகையாக இருந்தார். சமீபத்தில் கர்நாடகத்தில் உள்ள மாண்டியா தொகுதியில் நடந்த பாராளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார்.
எம்.பியாவதற்கு முன்பு நீர்டோஸ் படத்துக்கு கால்ஷீட் கொடுத்து நடித்து வந்தார். இதில் ரம்யாவுக்கு விலைமாது வேடமாம். படப்பிடிப்பு பாதி முடிந்துள்ளது. எம்.பியானதால் தொடர்ந்து அப்படத்தில் நடிக்க மறுத்து வருகிறார்.
விலைமாது வேடம் என்பதால் தனது இமேஜ் கெடும் என அஞ்சுகிறார். எனவே படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் முடக்கி போடுவதற்காகவே நடிக்க மறுப்பதாக கூறப்படுகிறது. நீர்டோஸ் படத்தின் தயாரிப்பாளர் சுதீந்திரா கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் ரம்யா மீது புகார் அளித்துள்ளார்.
ரம்யா 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்து படத்தை முடித்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.
இது குறித்து விசாரிப்பதற்காக கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் அவசர கூட்டம் நாளை கூடுகிறது. இதில் ரம்யா சார்பில் அவரது மானேஜர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரம்யா கட்சி பணிகள் மற்றும் அரசியல் கூட்டங்களில் பிசியாக பங்கேற்பதால் வரமாட்டார் என்று கூறப்படுகிறது. இதில் ரம்யா மீது நடவடிக்கை எடுப்பதா, இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படும். ரம்யா ஒப்பந்தப்படி ஏற்கனவே ஒதுக்கிய நாட்களில் நடித்து முடித்து விட்டார். மீண்டும் அப்படத்தில் நடிக்க மாட்டார் என்று அவர் தரப்பில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment