திருச்சி சிறப்பு சிறை முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் 12 நைஜீரியர்கள் தங்களுக்கு வழங்கப்படும் செலவினத் தொகை போதுமானதாக இல்லை எனக் கூறி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் நகரில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 12 நைஜீரியர்கள் திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு சிறை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக சிறப்பு சிறை முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு அரசு சார்பில் தினமும் ரூ. 70 செலவினத் தொகையாக வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 12 நைஜீரியர்களுக்கும் தினமும் தலா ரூ. 70 வழங்கப்பட்டதாம்.
ஆனால் தங்களுக்கு தினமும் ரூ. 150 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்பு சிறை முகாமில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தனித்துணை ஆட்சியர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் சிறப்பு சிறை முகாமுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
முகாமில் உள்ள 12 பேருக்கும் ஒரு வாரத்துக்கான செலவினத் தொகை, சமையல் பாத்திரங்கள், 9 பேருக்கு பாய் போன்றவை வழங்கப்பட்டன. இதையடுத்து நைஜீரியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
No comments:
Post a Comment