ஏற்காடு இடைத் தேர்தலை அடுத்து, தமிழக சட்டப்பேரவைக்கும் முன்கூட்டியே தேர்தல் வரும் என்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஏற்காடு இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வெ.மாறனை ஆதரித்து சேலம் மாவட்டத்தின் கருமந்துறை, தும்பல், பேளூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் பேசியது:
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. ஆனால், இதுவரையிலும் ஏற்காடு தொகுதிக்கு குறைகளைக் கேட்க வந்திடாத அமைச்சர்கள், இப்போது மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே வந்துள்ளனர்.
சட்டப்பேரவையில் திமுக எதிர்க்கட்சியாகக்கூட இல்லை. ஆனால், மக்கள் மன்றத்தில் நாங்கள் தான் நிலைத்திருக்கிறோம். இந்தத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கானது இல்லை என்றாலும், திமுகவுக்கு பெருகியுள்ள ஆதரவு ஆளும் கட்சியை மிரளச் செய்துள்ளது. எனவேதான், பல இடங்களில் எங்கள் மீது வழக்கும், திமுக தொண்டர்களை துன்புறுத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.
தேர்தல் மோதல் குறித்து திமுக புகார் கொடுத்தால் போலீஸார் அதைப் பதிவு செய்ய மறுக்கின்றனர். நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்பதால்தான், திமுக பிரசாரத்துக்காக பல இடங்களில் திரண்டிருந்த மக்களை பணம் கொடுத்தும், மிரட்டியும் திருப்பி அனுப்பியுள்ளனர்.
பொன்னாரம்பட்டியில் பரவை நாடு என்ற இடத்தில் திமுக பிரசாரத்தில் கலந்து கொள்ளவிருந்த மக்களை மிரட்டி, அருகேயுள்ள தொடக்கப் பள்ளியில் அமைச்சர் சுப்பிரமணியம் அடைத்து வைத்துள்ளார்.
நான் இதைச் சொல்வதற்காகக் கூட என் மீது வழக்குத் தொடரலாம். ஆனால், வழக்குகளை சந்திக்க நான் தயாராகவே உள்ளேன். தைரியம் இருந்தால் என் மீது வழக்குத் தொடரலாம். ஒருதலைப்பட்சமாகவே நடந்து கொள்ளும் காவல் துறையினர் தேர்தலுக்குப் பிறகு இதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும். எந்த ஆட்சியும் நிலையானது இல்லை என்பதை அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏற்காடு இடைத் தேர்தலில் திமுகவுக்கு நல்ல தீர்ப்பு வந்தால் தமிழக சட்டப்பேரவைக்கும் முன் கூட்டியே தேர்தல் வரும்.
திமுக ஆட்சிக் காலத்தில் வன்னியர் சமூகத்துக்காக நல வாரியம் அமைக்கப்பட்டது.
நீதிபதி, துணைவேந்தர் பணியிடங்கள் வழங்கப்பட்டன. பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியின் போது அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது பொய் வழக்குகள் தொடரப்பட்டன. மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். ராமதாஸ் கைதுக்காக முதலில் கண்டனம் தெரிவித்தவர் கருணாநிதிதான்.
திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நில அபகரிப்பு குற்றச்சாட்டு எழுந்தாலே, அவர்களை அவசர அவசரமாகக் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
ஆனால், அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக உள்ள சண்முகநாதன், கே.வி.ராமலிங்கம், ராஜேந்திர பாலாஜி, செந்தில் பாலாஜி, கே.சி.வீரமணி, முன்னாள் அமைச்சர் சிவபதி, உள்ளிட்டோர் மீது நிலப் பறிப்பு, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இப்போது சட்டப்பேரவைத் தலைவர் தனபால் மீதே வழக்குப் பதிவு செய்யப்பட்டு,
நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இவர்கள் மீது முதல்வர் எப்போது கைது நடவடிக்கை மேற்கொள்வார் என்று கேள்வி எழுப்பினார் மு.க.ஸ்டாலின்.
No comments:
Post a Comment