"மக்களவைத் தேர்தலில் எனது தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயார்' என்று தேசிய முற்போக்குத் திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
தில்லி பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 11 தொகுதிகளில் போட்டியிடும் அக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைநகரில் கடந்த 28-ஆம் தேதி முதல் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை பிரசாரத்தை நிறைவுசெய்த பிறகு செய்தியாளர்களுக்கு விஜயகாந்த் அளித்த பேட்டி:
"தில்லிவாழ் தமிழர்களின் பிரச்னைகளுக்கு இதுவரை தலைநகரில் ஆட்சியில் இருந்த கட்சிகள் தீர்வு காணவில்லை. ஆனால். தேர்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து வாக்காளர்களை ஈர்க்கிறார்கள்.
தமிழகத்தில் இருந்து தில்லியில் குடியேறிய தமிழர்களுக்கு ஜாதிச் சான்றிதழ் கிடைக்க வழி செய்ய முடியும். அதை மத்திய அரசிடம் தமிழக அரசு முறையாகத் தெரிவித்து செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து மக்களவைக்குத் தேர்வாகிவரும் உறுப்பினர்கள், தில்லிக்கு வந்தவுடன் இங்குள்ள தமிழர்களுக்கு ஏதாவது நல்லது செய்திருக்க வேண்டும். அவர்கள் செய்வார்கள் என தில்லிவாழ் தமிழர்கள் நம்பினார்கள். ஆனால், எதுவும் செய்யவில்லை. அதனால், தில்லியில் தேமுதிக போட்டியிட முனைப்புக் காட்டியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டு தில்லியில் குடியேறிவிட்ட வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என நம்புகிறேன்.
வெற்றி வாய்ப்பு பிரகாசம்: தில்லி முதல்வர் பதவிக்கோ, வேறு பதவிக்கோ ஆசைப்பட்டு வேட்பாளர்களை தேமுதிக களம் இறக்கவில்லை. குறிப்பிட்ட 11 தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் மட்டுமே எங்கள் கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆகவே, எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
ஏற்காடு தொகுதியில் எங்கள் கட்சியினரின் வாக்குகளை யாரும் வாங்க முடியாது. கடந்த தேர்தலில் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும் என்று நினைத்துத்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். அது தவறுதான். நல்லது நடக்காது என்பது தெரிந்துவிட்டதால், கூட்டணியில் இருந்து வெளியே வந்தோம். தமிழகத்தில் அதிமுகவுக்கு அடுத்த முறை வெற்றி கிடைக்காது. அதிமுக, திமுக ஆகிய இரண்டுமே பிரச்னை தரக்கூடிய கட்சிகளாகும். மின்சார பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இரு கட்சிகளும் தோல்வியடைந்துவிட்டன. மக்களவைத் தேர்தலில் கூட்டணி பற்றி முடிவு செய்ய அவகாசம் உள்ளது. எனது தலைமையை ஏற்க ஒப்புக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கத் தயார் எனக் கூறிக் கொள்கிறேன்' என்றார் விஜயகாந்த்.
No comments:
Post a Comment