3.12.13

வங்கக் கடலில் மீண்டும் புயல் அபாயம்



வங்கக் கடலில் நிலைக் கொண்டிருக்கும் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 3 நாள்களில் புயலாக மாற வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: வங்கக் கடலில் இலங்கை மற்றும் தமிழக கடல் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது இப்போது தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில், இந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறும். அடுத்த 72 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் அபாயம் உள்ளது.
மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தென்கிழக்கு வங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஞாயிற்றுக்கிழமை உருவானது. இதுவும் வலுவடைந்து வருகிறது.
இதுவும் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறும்போது, புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் அதனுடன் இணைந்துவிடும்.
இரு காற்றழுத் தாழ்வும் வங்கக் கடலின் தெற்கு பகுதியில் அருகருகில் உள்ளன. இவை புயலாக மாறும்போது ஆந்திரம் மாநிலம் நோக்கி நகராது. தமிழக கடற்கரை பகுதியிலேயே கரையை கடக்க்கூடும்.
 இதன் எதிரொலியாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழை பெய்யும். இந்த மழை மேலும் சில நாள்களுக்கு தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வானிலை முன்னறிவிப்பு: தமிழக கடலோர பகுதிகள் மற்றும் புதுவையின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்யும். உள்தமிழகத்தின் சில இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னையை பொருத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): எண்ணூர் - 100, பாம்பன் - 90, பாபநாசம் - 60, காரைக்கால், குன்னூர் - 50, செங்கோட்டை, சங்கரன்கோயில், திருவாரூர், கேளம்பாக்கம், சத்தியமங்கலம், ராமநாதபுரம், ராமேஸ்வரம் - 30, தென்காசி, குழித்துறை, மணிமுத்தாறு, கோத்தகிரி, விழுப்புரம், கழுகுமலை, சோழவரம், செங்குன்றம், பொன்னேரி, துறையூர் - 20, அம்பாசமுத்திரம், தரங்கம்பாடி, மன்னார்குடி, ஸ்ரீவைகுண்டம், பவானிசாகர், திருச்செந்தூர், மகாபலிபுரம், சீர்காழி, குளச்சல், கோவில்பட்டி, ஒட்டபிடாரம், நாகர்கோயில், ஒரத்தநாடு, மேட்டுப்பாளையம், பரமக்குடி, நாகப்பட்டினம், தொண்டி, விருதாச்சலம், செங்கல்பட்டு, திண்டுக்கல், பெரம்பலூர் - 10.

No comments:

Post a Comment