தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி முதல் ரன் எடுத்ததும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனை படைக்கும்.
தற்போது இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் 1,82, 881 ரன்களுடன் சமநிலையில் உள்ளன. இந்திய அணி 841 ஆட்டங்களிலும், ஆஸ்திரேலிய அணி 825 ஆட்டங்களிலும் இந்த ரன்களை எட்டியுள்ளது.
இருப்பினும் இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணியின் வெற்றி விகிதம் அதிகமாக உள்ளது. ஆஸ்திரேலியா 505 ஆட்டங்களிலும், இந்தியா 423 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.
அதிக ரன்கள் எடுத்த அணிகளில், பாகிஸ்தான் அணி 1,71,982 ரன்களுடன் 3-வது இடத்திலும், இலங்கை அணி 1,46,365 ரன்களுடன் 4-வது இடத்திலும் உள்ளன. 1,45,260 ரன்கள் எடுத்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்ற பின், நியூஸிலாந்துக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. எனவே, இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்க வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் ஆஷஸ் டெஸ்ட் தொடர் முடிந்த பின் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிக் கேப்டன் தோனி: இந்தியக் கேப்டன் தோனி தனிப்பட்ட முறையில் இரண்டு சாதனைகள் படைக்க காத்திருக்கிறார். தோனி 151 ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்டு 5,213 ரன்கள் குவித்துள்ளார். முன்னாள் கேப்டன் அசாருதீன் 174 போட்டிகளில் 5239 ரன்கள் அடித்துள்ளார். எனவே, தோனி இன்னும் 27 ரன்கள் எடுத்தால், ஒருநாள் ஆட்டங்களில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற சாதனையை படைப்பார்.
அதேபோல, அசாருதீன் தலைமையில் 90 ஆட்டங்களிலும், தோனி தலைமையில் 88 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும்பட்சத்தில், அதிக ஆட்டங்களில் இந்திய அணிக்கு வெற்றி பெற்றுத் தந்த கேப்டன் என்ற பெருமை தோனிக்கு கிடைக்கும். 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றிபெற்றால், அசாருதீன் சாதனையை தோனி சமன்செய்வார்.
தென் ஆப்பிரிக்கா சென்றது இந்திய அணி: இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம், டிசம்பர் 5-ம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 8 மற்றும் 11-ம் தேதிகளில் அடுத்த ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் தோனி தலைமையிலான இந்திய அணி மும்பையில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்டு தென்ஆப்ரிக்கா சென்றது.
இரு அணிகளுக்கும் இடையே டிசம்பர் 18 மற்றும் 30-ம் தேதிகளில் டெஸ்ட் போட்டிகள் தொடங்கவுள்ளன. தென் ஆப்பிரிக்க சூழலைப் புரிந்துகொள்வதற்காக டெஸ்ட் அணியை முன்கூட்டியே அனுப்பி வைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே, ஜாகீர் கான் உள்ளிட்ட டெஸ்ட் அணியில் இடம்பெற்ற மற்ற வீரர்கள் விரைவில் தென் ஆப்பிரிக்கா செல்வர்.
ஒருநாள் அணி விவரம்: தோனி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, விராட் கோலி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, அம்பாடி ராயுடு, மொஹித் சர்மா, உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா, ரஹானே.
No comments:
Post a Comment