3.12.13

ஏற்காடு: நாளை வாக்குப் பதிவு

அயோத்தியாபட்டணத்தில் அதிமுக வேட்பாளர் பெ. சரோஜாவுக்கு ஆதரவாக இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம்,  எடப்பாடி கே. பழனிசாமி, கே.பி. முனுசாமி, செல்லூர் ராஜு உள்ளிட்டோர்.வாழப்பாடியில் திமுக வேட்பாளர் வெ. மாறனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார் மு.க. ஸ்டாலின்.
கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த ஏற்காடு இடைத் தேர்தல் பிரசாரம் திங்கள்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. வாக்குப்பதிவு புதன்கிழமை (டிச.4) நடைபெறுகிறது.
ஏற்காடு (தனி) தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த எஸ்.பெருமாள் கடந்த ஜூலை மாதம் மறைந்ததை அடுத்து, அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுகவைத் தவிர மாநில, தேசிய அரசியல் கட்சிகள் எதுவும் போட்டியிடவில்லை. போட்டியிடாத கட்சிகளில் பல தங்களது ஆதரவு யாருக்கு என்பதைக் கூட இதுவரை தெளிவாக அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திமுக சார்பில் வெ.மாறனும், அதிமுக சார்பில் பெ.சரோஜாவும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏற்காடு தொகுதி முழுவதிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது. அதிமுக சார்பில் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய 60 பேர்களைக் கொண்ட மிகப் பெரிய தேர்தல் பிரசார குழு அமைக்கப்பட்டது.
இதேபோல, திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் விறுவிறுப்புடன் நடைபெற்றது.
அதிமுக வேட்பாளரை ஆதரித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா கடந்த வியாழக்கிழமை ( நவம்பர் 28) அன்று ஒரு நாள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.
மேலும், அதிமுக ஆதரவு கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் சார்பில் ஜி.ராமகிருஷ்ணன், சமக சார்பில் சரத்குமார், இந்திய குடியரசுக் கட்சி சார்பில் செ.கு.தமிழரசன் உள்ளிட்ட கட்சியினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர்.
இதேபோல, திமுக வேட்பாளரை ஆதரித்து அந்தக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 29-ஆம் தேதி முதல் நான்கு நாள்கள் பிரசாரம் மேற்கொண்டார். சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு வேன் மூலம் சென்ற அவர் வேட்பாளர் மாறனுக்கு வாக்கு சேகரித்தார். இதேபோல், திமுக எம்.பி. கனிமொழி, அந்தக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் கே.கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
மழையில் பிரசாரம்: பிரசாரத்தின் இறுதி நாளான திங்கள்கிழமை சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இருப்பினும் இது எந்த வகையிலும் தேர்தல் பிரசாரத்தை பாதிக்கவில்லை.
திமுக வேட்பாளர் மாறனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தும்பல், கருமந்துறை, பேளூர் ஆகிய இடங்களில் கொட்டும் மழையில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இறுதியில் வாழப்பாடியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துடன் இடைத் தேர்தல் பிரசாரத்தை மாலை 4.45 மணியளவில் அவர் நிறைவு செய்தார்.
அதிமுக வேட்பாளர் சரோஜா, இறுதி நாளான திங்கள்கிழமை காலையில் வாழப்பாடி அதன் சுற்றுப் பகுதிகளிலும், மாலையில் அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயிலில் இருந்து ரயில்வே கேட் வரையிலும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்டோர் சரோஜாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.
வெளியேறிய நிர்வாகிகள்: வாக்குப் பதிவு புதன்கிழமை நடைபெறுவதை அடுத்து, திங்கள்கிழமை பிரசாரம் நிறைவடைந்ததும், அமைச்சர்கள், வெளியூர்களில் இருந்து வந்திருந்த அரசியல் கட்சியினர் தொகுதியைவிட்டு வெளியேறத் தொடங்கினர்.
மலைப் பகுதிகளிலும், கிராமங்களிலும் வெளியூர்களைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் தங்கியுள்ளனரா என்று காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஏற்காடு தொகுதியில் கடந்த ஒரு மாதமாக தங்கியிருந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அதிமுக, திமுக நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் தொகுதியைவிட்டு ஒரே நேரத்தில் வெளியேறியதால் ஏற்காடு சாலை, அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட சாலைகளில் மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஏற்காடு தொகுதியில் இருந்து வெளியேறியவர்களில் பலர் சேலத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரம் முடிவடைந்ததை அடுத்து புதன்கிழமை (டிச.4) நடைபெற உள்ள வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று அடுக்கு பாதுகாப்பு: ஏற்காடு தொகுதியிலுள்ள 290 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக கணக்கில் கொள்ளப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய பாதுகாப்புப் படையினர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் உள்பட 2500 போலீஸôர் குவிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலரும், சேலம் மாவட்ட ஆட்சியருமான க.மகரபூஷணம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது:
வாக்குப் பதிவைக் கண்காணிக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் "வெப்கேமரா' பொருத்தப்பட்டு, அவை மடிக் கணினி மூலம் இணைக்கப்பட உள்ளன. இதன்மூலம், மாவட்ட தேர்தல் அலுவலகத்திலிருந்தே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுவதைக் கண்காணிக்க முடியும்.
வாக்குப்பதிவு நிகழ்வை அரசியல் கட்சியினரும் பார்க்கும் வகையில்  மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தனி அறை அமைக்கப்பட்டுள்ளது.
வெப்கேமராவுக்கான சிக்னல் கிடைக்காத குண்டூர், கொண்டயனூர், செந்திட்டு, கோனலூர், புத்தூர் ஆகிய 5 மலைக் கிராமங்களில் மட்டும் விடியோ மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும். இந்த மலைக் கிராமங்களில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்காக மட்டும் தனியாக வாகனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.

No comments:

Post a Comment