தெற்கு சூடானில் ராணுவத்துக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 400-500 பேர் பலியாகி இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் அதன் அதிகாரிகள் கூறியது:
ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு தெற்கு சூடான் தலைநகரிலிருந்து 400 முதல் 500 உடல்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்றனர்.
தெற்கு சூடான் அதிபர் சால்வா கீர் ஆதரவு படையினருக்கும், எதிர்ப்புக் குழுவினருக்கும் இடையே நடந்த சண்டையில் 800க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அமைதிப் படையின் தலைவர் ஹெர்வே லாட்சூஸ் கூறினார். ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் எழுந்துள்ள புதிய பிரச்னை குறித்து விவாதித்தபோது ஐ.நா.அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த பிரச்னையின் விளைவாக ஜூபா நகரைச் சுற்றியுள்ள 15,000 முதல் 20,000 பேர் அங்குள்ள ஐ.நா. முகாமில் தஞ்சம் கோரினர்.
அந்த மோதலில் பலியானோர் குறித்த தகவலை ஜூபா மருத்துவமனை வெளியிட்டது.
செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த புதிய மோதலினால் அந்த தகவலை ஐ.நா. உறுதி செய்யவில்லை என்றார் லாட்சூஸ்.
அப்போது, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த சரியான தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்றும், இது சிறிய சம்பவம் இல்லை என்றும் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் ஜெரார்டு அராட் தெரிவித்தார்.
முன்னாள் துணை அதிபர் ரீக் மாச்சரின் ஆதரவுப் படைகளே ஆட்சியைக் கவிழ்க்கும் இந்த சதிச் செயல் முயற்சியில் ஈடுபட்டதாக தெற்கு சூடான் அதிபர் சால்வா கீர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மோதல் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 10 பேரை கைது செய்திருப்பதாகவும் ,ரீக் மாச்சரை தேடி வருவதாகவும் தெற்கு சூடான் அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment