மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட லோக்பால் - லோக் ஆயுக்த மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. முக்கிய எதிர்க்கட்சியான பாஜக, இடதுசாரிக் கட்சிகள் ஆகியவை இந்த மசோதாவை ஆதரித்ததையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் இம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
மக்களவை அதன் தலைவர் மீரா குமார் தலைமையில் புதன்கிழமை காலையில் தொடங்கியது. அப்போது, மாநிலங்களவையில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட லோக்பால் - லோக் ஆயுக்த மசோதாவை மக்களவைச் செயலர் பால்சேகர் தாக்கல் செய்தார். இதையடுத்து, நண்பகல் 12 மணிக்கு அவை கூடியதும் லோக்பால் மசோதா மீதான விவாதத்தை மத்திய சட்டத் துறை அமைச்சர் கபில் சிபல் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
"2011-ஆம் ஆண்டு டிசம்பரில் லோக்பால் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அம் மசோதா தேர்வுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தேர்வுக் குழு வழங்கிய சில பரிந்துரைகள் சேர்க்கப்பட்டு திருத்தங்களுடன் கூடிய மசோதா மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அம் மசோதா தற்போது மக்களவையின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்படுகிறது' என்றார்.
மேலும் 6 மசோதாக்கள்: அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விவாதத்தில் பங்கேற்றுப் பேசியதாவது:
"ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டத்தால் மட்டுமே முடியாது. ஊழலுக்கு எதிரான முழுமையான கோட்பாடுகளை நாம் வகுக்க வேண்டும். அதற்கான அடித்தளத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைத்துள்ளது. ஊழல் எதிர்ப்பு தொடர்புடைய 8 சட்ட மசோதாக்களை கொண்டு வர அரசு உத்தேசித்தது. அதில் தகவல் அறியும் உரிமைச் சட்டம், லோக்பால் சட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், ஊழல் எதிர்ப்பு சட்டத்திருத்த மசோதா; சரக்கு மற்றும் சேவைகள் உரிய நேரத்தில் குடிமக்களுக்கு கிடைக்கவும், குறைகளைக் கேட்கவும் வகை செய்யும் மசோதா; பொது கொள்முதல் மசோதா; பன்னாட்டுப் பரிவர்த்தனையின் போது லஞ்சம் வாங்கும் வெளிநாட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் மசோதா; நீதித் துறை தரம் மற்றும் பொறுப்புணர்வு மசோதா; ஊழல்வாதிகள் பற்றி தகவல் கொடுப்போரைப் பாதுகாக்கும் மசோதா ஆகிய 6 முக்கிய மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அவற்றை நிறைவேற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாள்களை நீட்டிக்கத் தயங்கக் கூடாது' என்றார்.
பெருமை கொள்ளக் கூடாது: எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பேசுகையில், "நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எந்த முக்கிய அலுவலும் இந்த அவையில் மேற்கொள்ளப்படவில்லை. ஆறுதல் அளிக்கும் வகையில், லோக்பால் சட்ட மசோதாவையாவது நம்மால் நிறைவேற்ற முடிகிறதே என எண்ணிப் பெருமை கொள்ள வேண்டும். இம் மசோதாவை நிறைவேற்றி விட்டோம் என காங்கிரஸ் உரிமை கொள்ளக் கூடாது. அந்தப் பெருமை நாட்டு மக்களையும், ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய அந்த வயதான மனிதரையுமே (அண்ணா ஹசாரே) சாரும்' என்றார்.
ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் பேசுகையில் "லோக்பால் சட்டத்தால் அரசின் செயல்பாடு ஸ்தம்பிக்கும் அச்சம் உள்ளது. இது தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும். என்றாலும், மசோதாவை எங்கள் கட்சி ஆதரிக்கிறது' என்றார்.
அவரைத் தொடர்ந்து, பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் லோக்பால் திருத்த மசோதா தொடர்பான தங்கள் கருத்துகளை அறிக்கையாக அவையில் தாக்கல் செய்தனர். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் லோக்பால் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து, இனி இம் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நாடாளுமன்றச் செயலகம் அனுப்பி வைக்கும். அதைத் தொடர்ந்து, மசோதா நிறைவேற்றப்பட்ட ஆவணத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டதும் அது தொடர்பான ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்படும். அந் நாளில் இருந்து லோக்பால் மசோதாவுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து கிடைக்கும். அதன் அமலாக்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கும்.
சிறப்பம்சங்கள்
* மத்தியில் லோக்பால், மாநிலங்களில் லோக் ஆயுக்த அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
* லோக்பால் அமைப்பில் ஒரு தலைவர், அதிகபட்சமாக 8 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள்.
* அதில், 50 சதவீதம் பேர் நீதித்துறையை சார்ந்தவர்களும், மீதமுள்ளவர்கள் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோர் இடம் பெறுவர்.
* உறுப்பினர்களை தேர்வுக் குழுவினர் தேர்ந்தெடுப்பார்கள்.
* பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்படும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர், 4 சட்ட நிபுணர்கள் (குடியரசுத் தலைவர் பரிந்துரைக்கும்) ஆகியோர் தேர்வுக் குழுவில் இடம் பெறுவார்கள்.
* பிரதமர் உள்பட அரசு உயரதிகாரிகளையும் விசாரணைக்கு உள்படுத்தும் அதிகாரம் படைத்தது லோக்பால்.
* லோக்பால் சட்டம் அமலாக்கப்பட்ட ஓராண்டுக்குள் மாநில அரசுகள் லோக் ஆயுக்த அமைக்க சட்டம் கொண்டுவர வேண்டும்.
* ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரின் சொத்துகளை வழக்கு விசாரணையின் போதே முடக்கவும் அதிகாரம் உள்ளது.
* ஊழல் வழக்குகளின் ஆரம்பகட்ட விசாரணை, விசாரணை அமைப்பின் விசாரணை, நீதிமன்றத்தின் விசாரணை ஆகியவற்றுக்கான கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக நன்கொடை பெறுவது தொடர்பான வழக்குகளையும் லோக்பால் விசாரிக்கும்.
* நேர்மையான அதிகாரிகளுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* சிபிஐ உள்ளிட்ட அனைத்து விசாரணை அமைப்புகளை கண்காணிக்கவும், உத்தரவிடவும் லோக்பாலுக்கு அதிகாரம் உள்ளது.
* பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழு சிபிஐ இயக்குநரை தேர்வு செய்து பரிந்துரைக்கும்.
* லோக்பால் அனுமதியின்றி வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளை மாற்றம் செய்ய இயலாது.
* மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் பரிந்துரைக்கும் நபர் சிபிஐ வழக்கு விசாரணை இயக்குநராக நியமிக்கப்படுவார்.
* சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் அதிகாரம் உள்ளது.
சமாஜவாதி வெளிநடப்பு
லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமாஜவாதி, சிவசேனை கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
லோக்பால் மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், "லோக்பால் சட்டம் நாட்டுக்கு மிகவும் பேராபத்தை விளைவிக்கும். அதை மத்திய அரசு நிறைவேற்றாமல் அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெற வேண்டும்' எனக் குரல் கொடுத்தார். எதிர்க்கட்சி வரிசையில் இருந்த அத்வானியை நோக்கி "இந்த மசோதாவை உங்கள் கட்சி ஆதரித்தால் அது வரலாற்றில் கரும்புள்ளி ஆகக் கருதப்படும்' என்று முலாயம் சிங் கூறினார்.
இதையடுத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிவசேனை கட்சி உறுப்பினர்களும் லோக்பால் மசோதாவை எதிர்த்து அமளியில் ஈடுபட்டனர். பின்னர் சமாஜ்வாதி, சிவசேனை ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
No comments:
Post a Comment