19.12.13

சட்டத்தை மீறாத வரை சிங்கப்பூரில் பணியாற்ற அனுமதி


சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டவர்கள், சட்டத்தை மீறாத வரை இங்கேயே தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவர் என்று வெளியுறவு மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம் உத்தரவாதம் அளித்துள்ளார்.

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற கலவரம் தொடர்பாக 28 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலவரம் தொடர்பாகவும், போலீஸாரின் உத்தரவுக்கு இணங்க மறுத்த காரணத்துக்காகவும் 52 இந்தியர்கள், வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஆகியோரை சிங்கப்பூரை விட்டு வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிங்கப்பூரில் மீண்டும் பணியாற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தெற்கு ஆசியாவைச் சேர்ந்த 200 பேரை போலீஸார் எச்சரித்துள்ளனர். அவர்கள், சிங்கப்பூரில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்டவர்கள் மத்தியில் கே.சண்முகம் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார்.
அப்போது, லிட்டில் இந்தியா கலவரத்தில் தொடர்பு இல்லாதவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் இங்கு தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவர். சட்டத்தை மீறாத வரை இந்தியர்கள் உள்பட அனைத்து வெளிநாட்டவரும் இங்கு பணியாற்றலாம் என்று அவர் உத்தரவாதம் அளித்தார்.
காவல் நீட்டிப்பு: லிட்டில் இந்தியா கலவரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மூர்த்தி கபில்தேவ், சத்திய மூர்த்தி சிவராமன் ஆகிய 2 பேருக்கு ஒருவார காலம் போலீஸ் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment