கடந்த 2011ஆம் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் தான் திமுக பெரும் பாதிப்பை சந்தித்தது என அக்கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் திமுக ஆதரவில்தான் மத்தியில் ஆட்சியை நடத்தினர். கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸ் ஆட்சி அமைய திமுக தான் உறுதுணையாக இருந்தது.
இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசு துரோகம் செய்ததால் தான் திமுக மத்திய அரசை விட்டு வெளியில் வந்தது.
கடந்த 2006ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக அரசில் பங்கேற்காமல் காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தந்ததாக மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அதேபோல் தான் புதுச்சேரியிலும் காங்கிரஸ் அரசில் திமுக இடம் பெறவில்லை. திமுக அமைச்சர்கள் இருந்திருந்தால் மக்களுக்கு சிறப்பாக சேவை புரிந்திருப்பர். கூட்டணி தர்மத்தை மதித்து செயல்பட்டதால் திமுக தான் பாதிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால் தான் புதுவையில் 2011ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை இழந்தது. திமுகவினர் உழைப்பால் தான் காங்கிரஸ் 7 தொகுதிகளையாவது வெல்ல முடிந்தது.
மத்திய ரயில்வே துறையின் விரிவாக்கப் பணிகள் காரணமாக விடப்பட்ட ரயில்களை தாங்கள் சாதனையாக கூறி வருகின்றனர். புதுவை மாநிலம் நிதி நெருக்கடியில் உள்ளது. அதை தீர்க்க மத்திய அமைச்சர் நாராயணசாமி என்ன நடவடிக்கை எடுத்தார்?
ஏஎப்ஃடி ஆலையை புனரமைக்க ரூ.500 கோடி பெற்றுத் தருவேன் என நாராயணசாமி கூறினார். ஆனால் அது ஏட்டளவிலேயே உள்ளது. காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் அரசுகளின் நிர்வாக சீர்கேட்டை பார்த்துள்ள மக்கள், விரைவில் திமுக ஆட்சியை எதிர்நோக்கி உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment