தேவயானி கோப்ரகடேக்கு எதிரான வழக்கை கைவிட வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா வெள்ளிக்கிழமை நிராகரித்து விட்டது. வழக்கு விசாரணையை கைவிடவோ அல்லது இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவோ முடியாது என்று அமெரிக்கா அறிவித்துவிட்டது.
விசா மோசடி செய்ததாக இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேயை கடந்த வாரம் அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, தூதரக அதிகாரிக்கு அளிக்கப்படும் வழக்கமான சலுகைகள் கூட அளிக்காமல், குற்றவாளிகள் மற்றும் போதை அடிமைகளுடன் அவரைச் சிறையில் அடைத்தனர். சோதனை என்ற பெயரில் தேவயானியின் ஆடையைக் களைந்து அமெரிக்க அதிகாரிகள் அவமதிப்பு செய்தனர்.
இதுதொடர்பாக தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தேவயானிக்கு எதிரான வழக்கை எந்தவித நிபந்தனையுமின்றி அமெரிக்கா கைவிட வேண்டும் என்றார். செய்தியாளர்களிடம் பேசிய மற்றொரு மத்திய அமைச்சர் கமல்நாத், இந்த விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப்பிடம், இந்தியாவின் கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தேவயானி கோப்ரகடேக்கு எதிரான வழக்கை கைவிடவோ அல்லது இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவோ முடியாது என்று கூறினார்.
அமெரிக்கா பின்வாங்காது: தேவயானிக்கு எதிரான புகார்களை அமெரிக்கா மிகவும் முக்கியமானதாக எடுத்துக் கொண்டிருப்பதாகவும், அவர் மீதான வழக்கில் இருந்தோ அல்லது புகார்களில் இருந்தோ அமெரிக்கா ஒருபோதும் பின்வாங்கிச் செல்லாது என்றும் ஹார்ஃப் தெரிவித்தார்.
மேலும் தேவயானி கைது விவகாரம் என்பது முழுவதும் சட்டத்துறை சம்பந்தமானது என்றும், அவரை அப்படியே சுதந்திரமாக நடமாட அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
பேசும் திட்டமில்லை: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியுடன் பேச நேரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்திருப்பது பற்றி ஹார்ஃப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், சல்மான் குர்ஷித்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவும் அமெரிக்காவுக்கு தற்போதைக்கு கிடையாது என்று கூறினார்.
"விசாரணைக்கு இந்தியா உதவ வேண்டும்': இதற்கிடையே, தேவயானி குறித்த பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டின் புகார் குறித்து இந்தியாவிடமிருந்து சில தகவல்களைக் கேட்டுள்ளதாகவும், ஆனால், இந்தியா அவற்றை வழங்க மறுத்து வருவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தை இரு நாடுகளும் வேறு வேறு கோணங்களில் அணுகி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
"இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அரசுத்துறைகள் எங்களுடன் ஒத்துழைக்க மறுக்கின்றனர்' என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்த புகாரை மறுத்த மேரி ஹார்ஃப், ""சங்கீதா காணாமல் போனதாக புகார் எழுந்ததிலிருந்தே அமெரிக்கா இந்தியாவுடன் தொடர்பு கொண்டு வருகிறது.
எனினும், அமெரிக்க சட்டங்கள் இடமளிக்காததால் இந்தியாவின் ஒரு சில கடிதங்களுக்கு மட்டும் பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டது'' என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment