23.12.13

"மொசாம்பிக் விமான விபத்துக்கு பைலட்டின் சதியே காரணம்'

நமீபியாவில் நிகழ்ந்த விமான விபத்தை, அதன் பைலட் உள்நோக்கத்துடனேயே ஏற்படுத்தியதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கிலிருந்து கடந்த மாதம் 29ஆம் தேதி அங்கோலாவுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் நமீபியாவின் வப்வாட்டா தேசியப் பூங்கா அருகே திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 6 விமானப் பணியாளர்கள் உள்ளிட்ட 33 பேர் பலியாகினர். விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
இந்நிலையில், விமான கருப்புப் பெட்டியில் பதிவான தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆரம்பக் கட்ட விசாரணையில் பைலட் உள்நோக்கத்துடனேயே விபத்தை உண்டாக்கியது அம்பலமாகியுள்ளது.
இது குறித்து மொசாம்பிக் விமானப் போக்குவரத்து ஆணையத் தலைவர் ஜோயோ அப்ரியூ கூறியது:
அந்த விமானத்தை பைலட் சந்தோஷ் பெர்னாண்டஸ் கீழே இறக்குவதற்குக் கையாண்ட விதம் விபத்தை ஏற்படுத்தும் நோக்குடனேயே மேற்கொள்ளப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்று தெரியவில்லை. புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பைலட் சந்தோஷ் யாரையும் உள்ளே விடாமல் தனது அறையைப் பூட்டியதுடன், எச்சரிக்கை சமிக்ஞைகளையும் கவனத்தில் கொள்ளவில்லை. மேலும், விமானம் கீழ்நோக்கிச் சென்றபோது தரையில் மோதவிடாமல் அதனை தடுக்க சக பைலட்டை அனுமதிக்கவில்லை என்றார் அப்ரியூ.

No comments:

Post a Comment