23.12.13

சமுதாயத்தைக் காப்பது இளைஞர்கள் கடமை : சீமான்

சாதி, மதத்தால் சீரழிந்து கிடக்கும் சமூகத்தைக் காக்கும் கடமை  இளைஞர்களுக்கு உள்ளது என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மகான் காயலாபாவாவின் 124-வது ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் விழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற மதநல்லிணக்க, மனிதநேய மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் பேசியது:
தமிழர்களாகிய நாம் மனிதநேயம் காக்க, இனம் காக்க, உரிமைக்காகப் போராட அனுமதிகூட பெற முடியாத நிலையில் உரிமையிழந்து நிற்கின்றோம்.
 உலகத்தை நேசித்துக் கவிதைகள் பாடிய புலவர்கள் அனைவரும் நம் பாட்டன்கள்தான். யாரும் ஊரே யாவரும் கேளீர் என்று பொதுவுடைமை பற்றி அப்போதே பாடப்பட்டுள்ளது. 
மண்ணில் பிறக்கும் உயிர்கள் அனைத்தும் ஒன்றே. அவர்கள் செய்யும் தொழிலை வைத்து அவர்களை வேறுபடுத்திப் பார்ப்பது சரியல்ல.
மதங்கள் மனிதத்தை காக்க வேண்டுமே தவிர, அழிக்கக் கூடாது . அனைவரும் ஒரே இனம்தான். இதில் வேற்றுமை ஏதுமில்லை என முன்னோர் கூறியுள்ளனர். இதைத்தான் மார்க்சியம் பொதுவுடைமை என்கிறது. 
சமதர்ம சமூகம் அமைய வேண்டும் எனப் போராடினார் மார்க்ஸ். இதைத்தான் நம் முன்னோர் உலகம் சமநிலை பெற வேண்டும். அதில் உயர்வு, தாழ்வில்லை எனப் பாடியுள்ளனர். மதத்தினும் கொடிய சாதி ஒழிக்கப்பட வேண்டும்.
சீரழியும் சமுதாயத்தைக் காக்கும் பொறுப்பில் இளைஞராகிய நீங்கள் உள்ளீர்கள். பசியோடு இருப்பவனுக்கு உணவும், விதவைக்கு மறுவாழ்வும் கொடுக்காத மதத்தைத் தூக்கியெறிய விவேகானந்தர் குரல்கொடுத்தார் என்றார் சீமான்.
தமிழ் மாநில மதநல்லிணக்கப் பேரவை நிறுவனர் ஏ.எஸ்.எம். காஜாசெரீப் தலைமை வகித்தார். திருஞான சம்பந்தர் அறக்கட்டளைச் செயலர் டாக்டர் எம். ஜெய்லானி முன்னிலை வகித்தார். மாநாட்டைத் தொடக்கிவைத்து திருச்சி வேலுச்சாமி பேசினார். கேரள சினேகம் டிரஸ்ட் முதல்மடா சுவாமி சுனில்தாஸ்ஜி, ஆசியுரை வழங்கினார். ஏ.எஸ்.எம். ஜைனுத்தீன் நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment