தாய்லாந்தில் அரசுக்கு எதிரான போராட்டம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கியது.
தாய்லாந்தில் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் அரசுக்கு எதிராக கடந்த ஒரு மாதமாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.
எதிர்க்கட்சி எம்.பிக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர். இதையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த பிரதமர் யிங்லக் ஷினவத்ரா முன்வந்தார்.
இருப்பினும் பிரதமர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், அந்நாட்டு மன்னரின் 86வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு போராட்டத்தை எதிர்க்கட்சிகள் ஒத்திவைத்தன.
மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ், ""மக்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியான முறையில் அரசுடன் தீர்வு காண வேண்டும்''
என வலியுறுத்தினார்.
இதையடுத்து வரும் பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தேர்தலை நடத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
மேலும், தேசிய சீரமைப்புக்கான திட்டத்தை சனிக்கிழமை அறிவித்ததுடன் அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்கும்படி பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தன.
ஜனநாயகக் கட்சி காலவரையற்ற போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததன்பேரில், தலைநகர் பாங்காக்கில் ஆயிரக்கணக்கானோர் ஞாயிற்றுக்கிழமை திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டக் குழுத் தலைவர் தாங்க்ஸ்பான் கூறுகையில், ""இங்கு நடைபெறும் பேரணி அரசுக்கும், பிரதமருக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும்'' என்றார்.
No comments:
Post a Comment