23.12.13

ஊழல், வளர்ச்சி விகிதம் குறித்த கருத்து: எதிர்க்கட்சியில் இருக்கிறாரா ராகுல்?


ஊழல் அதிகரித்துள்ளது மற்றும் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்திருப்பது தொடர்பாக சமீபத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து வெளியிட்டார். அதனையடுத்து, எதிர்கட்சியில் இருந்து வந்த தலைவராகவே ராகுலை பார்க்க தோன்றுகின்றது என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

இது குறித்து ஹைதராபாதில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவரது பேச்சு எதிர்கட்சியில் ராகுல் காந்தி இருப்பது போலவே அமைந்தது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது கட்சியே மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது. அதற்கு முன்பாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் கட்சியே ஆட்சி புரிந்தது என்பதையும் நினைத்துப் பார்க்க ராகுல் மறந்துவிட்டார். மேலும், காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் ஊழல் அதிகரித்துள்ளதற்கும், நாட்டின் வளர்ச்சி குறைந்து இருப்பதற்கும் அந்தக் கட்சியே பொறுப்பேற்க வேண்டும்.
நாட்டில் வளர்ச்சி இல்லாமல் வறுமையை ஒழிக்க முடியாது என்று ராகுல் பேசியுள்ளார்.
இதுபோன்ற நிலைமை நாட்டில் ஏற்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சிதான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றாமல் இருப்பது,லோக்பால் மசோதாவை 6 ஆண்டுகள் தாமதப்படுத்தியது, பெண்கள் மீதான கொடுமைகள், அரசியல் காரணங்களுக்காக சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவது, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் தற்கொலை, இந்திய ரூபாயின் வீழ்ச்சி, பொருளாதாரச் சரிவு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் துரோகம் செய்தது மற்றும் அடுத்தடுத்த ஊழல் உள்ளிட்டவை பற்றியும் ராகுல் காந்தி பேசுவாரா? என்றும் வெங்கய்ய நாயுடு கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment