மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளில் திமுக தனித்துப் போட்டியிட்டாலும் வெற்றி பெறும் என்றார் முன்னாள் அமைச்சர் க. பொன்முடி.
புதுவை மாநில திமுக சார்பில் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் சிங்காரவேலர் திடலில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
புதுவை மாநில திமுக அமைப்பாளர் டாக்டர். எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சிவக்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் சிவா, சுப்புராயன், ராஜாராமன், கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் முதல்வர் ஜானகிராமன் வரவேற்றார்.
விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி பேசியது:
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. அதிமுக அரசின் விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராசா, கனிமொழி கைது செய்யப்பட்டபோதே காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்திருக்க வேண்டும். ஆனால், மத்தியில் மதவாத கட்சிகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், ஈழத் தமிழர்களுக்காகவும் பொறுத்திருந்தோம். காலதாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்றாலும், நல்ல முடிவை கருணாநிதி எடுத்துள்ளார்.
இதன்மூலம் திமுக தொண்டர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் 4 முனைப் போட்டிதான் வரும். தனித்து நின்றாலும் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைத்தாலும் கருணாநிதி கைகாட்டுபவரே பிரதமராக முடியும் என்றார் அவர்.
கூட்டத்தில் நந்தா சரவணன் எம்எல்ஏ, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பழனிராஜா, முன்னாள் அமைச்சர் மணிமாறன், முன்னாள் எம்பி திருநாவுக்கரசு, முன்னாள் எம்எல்ஏக்கள் சோமசுந்தரம், சீத்தா, வேதநாயகம், கோமளா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment