19.12.13

தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம்


அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி மோசமான முறையில் கைது செய்யப்பட்டதற்கும்,ஆடைகளைக் களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை இரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜான் கெர்ரி தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

துரதிருஷ்டவசமான இந்தச் சம்பவத்தால் இந்தியாவுடனான நெருங்கிய நட்புறவு பாதிப்படைந்துவிடக் கூடாது என்ற கவலையையும் கெர்ரி தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. "தேவயானியைப்போல சம வயதுள்ள 2 பெண் குழந்தைகளுக்குத் தந்தையான ஜான் கெர்ரி, தேவயானி கைது விவகாரத்தைத் தொடர்ந்து இந்தியாவில் ஏற்பட்டுள்ள உணர்வுப்பூர்வமான வெளிப்பாடுகளை உணர்ந்துகொண்டுள்ளார். வெளிநாடுகளில் பணியாற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் மதிப்பும் கண்ணியமும் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைப்பதைப்போல், அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளின் மதிப்பும் கண்ணியமும் காப்பாற்றப்பட வேண்டியது அவசியம் என்று தொலைபேசி உரையாடலின்போது கெர்ரி கூறினார்' என்று அந்தச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment